கட்சிக்குள் ஆணாதிக்க செயல்பாடு: குமுறும் தி.மு.க., மகளிர் அணி
பெண் உரிமை என்று முழங்கும் தி.மு.க.,வில் மகளிரணியினர் அடுத்தகட்ட நிலைக்கு செல்லவிடாது மாவட்ட நிர்வாகிகளே முட்டுக்கட்டையாக இருப்பதாக புலம்பல்கள் எழுகின்றன.
கோவை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளராக கணபதி ராஜ்குமார் களம் இறங்கியுள்ள நிலையில் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை தி.மு.க.,வில் மகளிரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மத்தியில் 'தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை; மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பும் தருவதில்லை' என்ற புலம்பல்கள் எழுகின்றன.
மிரட்டுகின்றனர்
தி.மு.க., மகளிர் அணியினர் கூறியதாவது:
கோவையில் மகளிர் அணியினருக்கு அங்கீகாரம் கிடைக்காமல், மாவட்டச்செயலர்கள், நிர்வாகிகள் சிலர் தடுக்கின்றனர். வார்டுக்குள்ளேயே பணிகள் அளித்து முடக்குகின்றனர். பூத் கமிட்டி பணிகளை வார்டு செயலர், பகுதி கழக செயலர்கள் மேற்கொள்கின்றனர்.
பிரசாரத்துக்கு மகளிர் அணியை அழைப்பதில்லை. நாங்களே தெரிந்து செல்ல வேண்டியுள்ளது. தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களிடம், குறிப்பாக குடும்ப தலைவிகளிடம் மகளிர் அணியால்தான் எளிதில் கொண்டு சேர்க்க முடியும்.
நாங்களே பிரசாரத்துக்கு வீடு தோறும் சென்றாலும், மாவட்ட நிர்வாகிகள் உடன் வருவதில்லை; ஒத்துழைப்பும் தருவதில்லை. வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும் என, மேடைகளில் மட்டும் அமைச்சர்கள் பேசுகின்றனர்.
இங்கு மாவட்ட நிர்வாகிகளின் தன்னிச்சையான முடிவால் அதிருப்திதான் மிச்சம். வார்டுகளில் மட்டுமே வேலை வாங்கும் எங்களை மாவட்ட அளவில் வளரவிடுவதில்லை. தேர்தல் தொடர்பாக நாங்கள் ஏதேனும் கூட்டம் நடத்தினாலும், எங்களை மீறி கூட்டம் நடத்துகிறீர்களா என்று மிரட்டுகின்றனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவையில் நடந்த இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த அவலம் குறித்து முறையிட்டிருந்தோம். செந்தில் பாலாஜி இருந்திருந்தால், இந்தப் பிரச்னை தீர்ந்திருக்கும். ஆனால், துரதிருஷ்டம் அவர் ஜெயலிக்குப் போய் விட்டார். அதனால், கோவையில் தற்போது பொறுப்பு அமைச்சராக இருப்பவரிடம் பிரச்னையை எடுத்து செல்ல முடியவில்லை. அவரும் இந்த மாதிரி பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில்லை.
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் பிரச்னைக்கு விடிவு கிடைக்கவில்லை. தேர்தலுக்குப் பணியாற்றுவதில் மட்டுமல்ல; மற்ற நேரங்களில் கட்சிப் பணி மற்றும் மக்கள் பணியில் கூட சுதந்திரமாக மகளிர் அணியைச் சேர்ந்தவர்களால் ஈடுபட முடியவில்லை.
தமிழக அளவில் பிரச்னை
பெண் உரிமை பற்றி பேசுவோரே பெண்களிடம் அடக்குமுறையை கையாளுகின்றனர். இதனால், இந்த தேர்தலில் ஆண்களுக்கு இணையாக எங்களால் பணியாற்ற முடியவில்லை.
இந்த மாதிரி விஷயங்களை கட்சித் தலைமைக்கு எடுத்துச் சென்றாலும், அங்கும் தீர்வு கிடைப்பதில்லை. அதனால், பிரச்னைக்கு எப்படி தீர்வு கிடைக்கும் என புரியாமல் மகளிர் அணியினர் தவித்து வருகின்றனர். கட்சிக்குள் இந்த மாதிரி பிரச்னை தமிழகம் முழுதும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து