Advertisement

எம்.பி., ஆன பிறகு 100 நாள்களுக்கான திட்டங்கள் இது: பட்டியலிட்ட அண்ணாமலை

"தற்போது நடக்கவிருப்பது, மாநிலத்துக்கான தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ அல்ல. நாட்டுக்கான தேர்தல். பிற கட்சிகளுக்கு வாக்களிப்பதால், எந்தப் பலனும் மக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதையொட்டி, கோவை தொகுதிக்கான வாக்குறுதிகளை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பட்டியலிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்பது உறுதி. கோவை தொகுதி உறுப்பினரான நூறு நாட்களில், பல்லடம் சட்டமன்றத் தொகுதியில், ஐந்து இடங்களில் மலிவு விலையில் வழங்கும் மக்கள் மருந்தகங்கள் கொண்டு வரப்படும்.

பல்லடம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு, அவற்றிலிருந்து, குழாய் மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுப்போம். கோவை தொகுதியில், 500 இடங்களில் இ-சேவை மையங்கள் அமைக்கப்படும்.

கோவைக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும், எம்.பி., அலுவலகம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் குறைகளுக்கான தீர்வுகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

உலகத் தரமான, கட்டணமற்ற கல்வியை வழங்கும் நவோதயா பள்ளிகளை காமராஜர் பெயரில், தமிழகத்தில் நிச்சயம் கொண்டு வரப்படும். தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக தி.மு.க., நடத்தும் எதிர்ப்பு நாடகங்களை முறியடித்து, முதல் நவோதயா பள்ளியை கோவைக்கு கொண்டு வருவோம்.

இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்தை வீணாகாமல் பாதுகாக்கவும், சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்தப் பகுதியில், குற்றங்கள் அதிகமாக இருப்பதால், புறக்காவல் நிலையங்கள் வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை. எனவே புறக்காவல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

1958ல் இருந்து செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு தீரும். இதற்குத் தேவைப்படும் 10,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற்று நிறைவேற்றுவோம்.

தொகுதியில், கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு, மத்திய அரசின் மோடி வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும். வளையபாளையத்தில் மருத்துவமனை அமைக்க ஒதுக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதியை எடுத்து சமூகக்கூடம் அமைக்க திமுக முயற்சி செய்தது. அந்த நிதியை மீட்டு, மருத்துவமனை அமைத்துத் தரப்படும்.

ஒவ்வொரு கிராமத்திலும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக, வெற்றி பெற்ற நூறு நாட்களில், பிரதமர் கொண்டு வந்த கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், ஒவ்வொரு கிராமங்களிலும், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.

வளையபாளையத்தில், 35 ஆண்டுகளாக பிரச்னையில் இருக்கும் திரௌபதியம்மன் ஆலயத்தின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, மக்கள் வழிபட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போது நடக்கவிருப்பது, மாநிலத்துக்கான தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ அல்ல. நாட்டுக்கான தேர்தல். பிற கட்சிகளுக்கு வாக்களிப்பதால், எந்தப் பலனும் மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்