பா.ஜ.,வும் ஹிந்து உரிமை மறுக்கும் கட்சி தான்!
நம் அரசியல் சாசன சட்டம் குடியுரிமை, சுதந்திர வாழ்வுரிமை, பேச்சுரிமை, மதவுரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆகிய அடிப்படை உரிமைகளை அனைத்து குடிமக்களுக்கும் பாகுபாடின்றி வழங்குகிறது. இருப்பினும், சிறுபான்மையினருக்கு சில விசேஷ உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.
அரசியல் சாசன சட்டத்தில் அப்படி ஒன்றுமே இல்லை. மக்கள் அப்படி கருதுவதற்கு காரணம், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்களில் அரசு தலையிடுவது இல்லை என்பது தான்.
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சரி, அரசியல் சாசனம் வந்த பின்னரும் சரி, ஹிந்து மக்களின் அடிப்படை மத உரிமைகள் மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளன என்பது தான் உண்மை. ஹிந்து மக்களின் கோவில்களை மட்டும் தான் மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கின்றன; எடுத்து நிரந்தரமாக வைத்துக் கொள்கின்றன.
அரசியல் சாசனம்
அரசியல் சாசனத்தின் ஷரத்து 25, எல்லா குடிமக்களுக்கும் மூன்று உரிமைகளை வழங்குகிறது.
1. மத நம்பிக்கை கொள்ளும் உரிமை
2. அந்த நம்பிக்கையை பின்பற்றி நடக்கும் உரிமை
3. அந்த நம்பிக்கையை பரப்பும் உரிமை.
குடிமக்கள் சட்டப் பிரச்னைகள் செய்யாமல், ஒழுக்கக்கேடாக எதுவும் செய்யாமல், மக்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கும் எதையும் செய்யாமல் இந்த உரிமைகளை பின்பற்றும் போது, இவற்றில் அரசு குறுக்கிடவே முடியாது.
இப்படி தான் வழிபட வேண்டும்; இந்த மொழியில் வழிபாடு செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்ல அரசுக்கோ, நீதிமன்றத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை.
அரசியல் சாசனம் ஷரத்து 26, -சமய உட்பிரிவுகளுக்கு தங்கள் வழிபாட்டு தலத்தை தாங்களே பிறர் குறுக்கீடின்றி நிர்வாகம் செய்யவும், தங்கள் வழிபாட்டு முறைகளை தாங்களே முடிவு செய்து பின்பற்றவும் முழு அடிப்படை உரிமை வழங்கியுள்ளது.
உதாரணமாக, ஒரு பெந்தகோஸ்தே சர்ச்சில் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் குறுக்கீடு செய்ய முடியாது; நிர்வாகம் செய்ய முடியாது. அதேபோல் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர் நடத்தும் மசூதியில் வேறு பிரிவினர் பங்கேற்க முடியாது. வேறு பிரிவினர் மாத்திரமல்ல; அரசும் உள்ளே வர முடியாது. இது அரசியல் சாசனம், ஹிந்து மக்கள் உள்ளிட்ட எல்லா மதப் பிரிவுகளுக்கும் வழங்கும் அடிப்படை உரிமை.
ஹிந்துக்களுக்கு மறுக்கப்படும் உரிமை
மற்ற மத உட்பிரிவு வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வாகம் செய்யும் போது; ஹிந்து தர்ம உட்பிரிவு வழிபாட்டு தலங்களான சிவன், விஷ்ணு, முருகன், அம்மன் கோவில்கள் எல்லாம், அந்தந்த மாநில அறநிலையத் துறைகளின் முழு கட்டுப்பாட்டில் வருவதற்கு என்ன காரணம்? இது, அரசியல் சட்டத்திற்கு விரோதம் இல்லையா? ஆம், விரோதம் தான். விழிப்புணர்வு இல்லாத ஹிந்துக்களுக்கு இதைப் பற்றி தெரிந்தால் தானே?
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி இருப்பதற்கு, அரசியல்வாதிகளின் பிடிவாதம், அரசு அதிகாரிகளின் மோசடித்தனம், நீதிமன்றங்களின் தெளிவற்ற மற்றும் மாறுபட்ட தீர்ப்புகள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஹிந்து மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய அறியாமையும், அலட்சியமும், தங்கள் கலாசாரத்தை காப்பதில் பொறுப்பற்ற தன்மையும் தான் முக்கிய காரணம்.
இந்த நாட்டில் பெரும்பான்மை மக்களாக உள்ள ஹிந்துக்களுக்கு, மத சம்பந்தமான உரிமைகள் 1950ல் இருந்து மறுக்கப்பட்டு வந்துள்ளன. இஸ்லாமிய, கிறிஸ்துவ பெருமக்கள் எளிதாக பெற்றுள்ள மத உரிமைகளை, ஹிந்துக்கள் போராடிக் கூட பெற முடியாத அவல நிலை உள்ளது.
கோவில் விஷயங்களில் பெரும் முடிவுகள் எடுப்பது அமைச்சரும், அதிகாரிகளும் தான். இது முழுக்க முழுக்க சட்ட விரோதம். அமைச்சரோ, அதிகாரியோ முடிவு எடுக்கக்கூடாது என்பதற்கு, பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முன்னுதாரணங்களாக உள்ளன. அவற்றை பற்றி ஹிந்து மக்களுக்கு எந்த புரிதலும் இல்லை. ஹிந்து மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களுக்கும் இந்த புரிதல் இல்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம்.
கட்சி பாகுபாடு இல்லை
கடந்த 50 - -60 ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளின் ஆட்சிகள் மட்டும் தான் ஹிந்து கோவில்களையும், அறக்கட்டளைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, ஹிந்துக்களுக்கு அடிப்படை உரிமைகளை தொடர்ந்து மறுத்து வந்தன என்று சொல்வது பாதி உண்மை தான்.
ஏனெனில், இப்படி செய்வதில், பா.ஜ., மற்ற கட்சிகளுக்கு சிறிதும் சளைத்த கட்சியல்ல.
மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரகண்ட் மாநிலங்களில் மிக மோசமான அறநிலையத்துறை சட்டங்கள் உள்ளன. அவற்றை நீக்கவோ அல்லது அவற்றின் கடுமையை குறைக்கவோ பா.ஜ., எந்த முயற்சியும் எடுத்ததில்லை.
சொல்லப்போனால் சுதந்திர இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ., அரசு கொண்டு வந்த புதிய அறநிலையத்துறை சட்டம் தான், இந்த நாட்டில் இயற்றப்பட்ட மிக மோசமான அறநிலையத்துறை சட்டம். அந்த சட்டம் செல்லும் என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் சொன்னது, சட்டம் தெரிந்தவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. பிறகு, அந்த மாநில மக்களின் கடுமையான எதிர்ப்பால் அது வாபஸ் பெறப்பட்டு, பழைய அறநிலையத்துறை சட்டம் அங்கு தொடர்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பின் பலத்தால், காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகத்தை, அந்த மாநில அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துள்ளது. அங்கு, இரு முறை முதல் அமைச்சராக வந்த அக்மார்க் ஹிந்துத்வா முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவிலை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க ஒன்றும் செய்யவில்லை; செய்வார் என்றும் தோன்றவில்லை.
அண்மையில் அலகாபாத் நீதிமன்றம், உ.பி. அரசு, கோவில் நிலங்களை எடுத்துக் கொண்டதற்காக ஆண்டுதோறும் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை பெற, கோவில்கள் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டி உள்ளது என்று யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்துள்ளது.
ஹிந்துத்வா கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பா.ஜ., தங்கள் தேர்தல் அறிக்கையில், கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, அவற்றின் மேம்பட்ட நிர்வாகத்தை உறுதி செய்வோம்; கோவில் பணம் அந்தந்த கோவில்களுக்கும், பக்தர் நலனுக்கும் மட்டுமே செலவு செய்வதை உறுதி செய்வோம் என்று சொன்னதே இல்லை. மற்ற கட்சிகள் எப்படியோ அப்படித்தான் இந்த விஷயத்தில் பா.ஜ.,வும்.
தேர்தல் சமயத்தில் கண்டமேனிக்கு சண்டை போடும் கட்சிகள் அனைத்தும் ஹிந்துக்களின் அடிப்படை மத, கோவில் நிர்வாக உரிமைகளை மறுப்பதில், மறைப்பதில் மிகுந்த ஒற்றுமையுடன் செயல்படுவது, ஹிந்துக்களுக்கு வாய்த்த சாபக்கேடு.
அரசியல்வாதிகள் ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதும், மறைப்பதும் ஹிந்துக்களுக்கு பழகி போய்விட்டது. இதனால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, கலாசாரம் ஆகியவற்றில் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்பதே ஹிந்துக்களுக்கு தெரிவதில்லை.
கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 60,000 கோடி ரூபாயை ஹிந்து சமுதாயம் இழக்கிறது. இந்த தொகை ஹிந்துக்களின் நலனுக்கு செலவிடப்பட்டால், ஹிந்து சமுதாயம் எப்படி மாறும்?
-டி.ஆர் ரமேஷ் , மாநில தலைவர் ஆலய வழிபடுவோர் சங்கம்
வாசகர் கருத்து