Advertisement

'ஸ்டாலின் தான் வாராரு' பாடல்: பிரசாரத்தில் தவிர்க்க தி.மு.க., முடிவு

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க.,வின் மூன்றாண்டு கால செயல்பாடுகளில், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலதரப்பினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால், கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற நூறு சதவீத வெற்றியை இம்முறை தி.மு.க.,வால் பெற முடியுமா என்ற சந்தேகம் அக்கட்சியினருக்கே ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைமைக்கும் கள நிலவரம் உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு ஏஜன்சிகள் வாயிலாக தகவலாகக் கிடைக்க அதிர்ந்து போய் உள்ளனர்.

இதற்கிடையில் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை மேலும் அதிகரித்து விடாமல் இருக்கவும், இருக்கும் அதிப்தியை குறைக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தி.மு.க., தலைமை திட்டமிட்டு, அதற்கான காரியங்களை செய்து வருகிறது.

கடந்த 2021க்கு முன் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மக்களை சந்தித்து வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டதோடு, பிரஷாந்த் கிஷோரின் 'ஐ பேக்' நிறுவனம் அளித்த பல்வேறு மக்களை ஈர்க்கும் திட்டங்களையும் தி.மு.க.,வினர் களத்தில் செயல்படுத்தினர்.

அதில் ஒருவிஷயம் தான், 'ஸ்டாலின் தான் வராரு; விடியல் தரப் போறாரு' என்ற பாடல். பதிவு செய்யப்பட்ட அந்தப் பாடல், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட்டு, தி.மு.க.,வினரால் மக்கள் மத்தியில் ஒலிக்க விடப்பட்டது.

தி.மு.க.,வினர் பலரும் இதை செல்போன் காலர் ட்யூனாகவும் வைத்து, ஒரு நாளைக்கு ஓரிடத்திலாவது இந்த பாடலை ஒவ்வொருவரும் கேட்டே ஆக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினர்.

அ.தி.மு.க., ஆட்சி மீதான அதிருப்தியை வலுவாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றதோடு, அடுத்து ஆட்சிக்கு வந்தால், கட்டாயம் மக்கள் எதிர்பார்க்கும் நிறைய விஷயங்களை செய்து கொடுப்போம் என்ற ரீதியில் 'ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தரப் போறாரு' என்ற பாடல் மூலம் ஏற்படுத்தியதோடு, பாடலை மக்கள் மனதில் பதிய வைத்தனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னரும், அமைச்சர்கள், மா.செ.,க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என தி.மு.க.,வில் இருக்கும் பெரும்பாலானோர், செல்போன் காலர் ட்யூனாக அதைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், தி.மு.க., ஆட்சியின் முரண்பட்ட செயல்பாடுகளால் மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி இருக்க, 'ஸ்டாலின் தான் வாராரு' பாடல் மெல்ல மெல்ல குறையத் துவங்கின. தி.மு.க.,வினர் வீட்டு இல்லத் திருமணங்களில் கூட ஒலிக்க விட்ட இந்தப் பாடல் மெல்ல மெல்ல மறையத் துவங்கியது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுதும் பிரசாரத்துக்குச் செல்லும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்கும்போது, ஸ்பீக்கர் வாயிலாக 'ஸ்டாலின் தான் வாராரு' பாடலை ஒலிக்க விட்டனர்.

ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் மக்களில் பலரும், இந்தப் பாடலைக் கேட்டு அதிருப்தி அடைந்தனர். இந்தத் தகவல், உளவுத்துறை வாயிலாக தி.மு.க., மேலிடத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பாடலை பிரசார களத்தில் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கட்சி கேட்டுக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து, கட்சி மூத்த நிர்வாகி கூறுகையில், “தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி பிரசாரத்துக்கு வருகையில் 'அவர்தான் கலைஞர்' என பாடல் இடம்பெறும். அதேபோலத்தான், தற்போது 'ஸ்டாலின் தான் வராரு' பாடலும், 'நான் ரெடி; நீங்க ரெடியா?' வசனப் பதிவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்றதும், அதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதால், ஒரு சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்