அப்பாவுக்கும் மகனுக்கும் தோல்வி பயம்: பழனிசாமி பேச்சு
"எங்கள் நிர்வாகிகளும் தொண்டர்களும் விருப்பப்பட்டதால் பா.ஜ., உடனான கூட்டணியில் இருந்து விலகினோம். அதற்கு நீங்கள் ஏன் பொறாமைப்படுகிறீர்கள்?" என, ஸ்டாலினுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தை இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகளிலேயே வலிமையான கட்சியாக அ.தி.மு.க., இருக்கிறது. நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்தோம். அந்தக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம்.
ஆனால், ஸ்டாலினும் உதயநிதியும் பா.ஜ., உடன் நாங்கள் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக பேசி வருகிறார். அப்படிப்பட்ட அவசியம் எங்களுக்கு இல்லை. அந்தப் பழக்கம் உங்களுக்குத் தான் இருக்கிறது.
கூட்டணியில் இருந்து விலகிவிட்டால் ஏன் எரிச்சல்படுகிறீர்கள்.. பொறாமைப்படுகிறீர்கள். எங்கள் நிர்வாகிகளும் தொண்டர்களும் விருப்பப்பட்டதால் பா.ஜ., உடனான கூட்டணியில் இருந்து விலகினோம். அப்பாவுக்கும் மகனுக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது.
பா.ஜ., வேண்டாம் என்பது தொண்டர்கள் எடுத்த முடிவு. நான் தொண்டர்களுடன் இருக்கிறேன். உங்களைப் போல அல்ல. ஸ்டாலின் வந்த பாதை வேறு. நான் வந்த பாதை வேறு. அ.தி.மு.க.,வுக்காக உழைத்து, தலைமைக்கு விசுவாசமாக இருந்தேன்.
4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். எந்தக் கட்சியிலாவது கிளைச் செயலர், பொதுச்செயலராக முடியுமா அல்லது முதல்வர் தான் ஆக முடியுமா. ஸ்டாலினுக்கு திராணி இருந்தால், 'எங்கள் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை முதல்வர் ஆக்குவேன்' என்று சொல்ல முடியுமா?
அந்தக் கட்சியில் அப்படிப் பேசினாலே பதவியைப் பறித்துவிடுவார்கள். குடும்ப ஆட்சி என்பது குறித்து ஒரு விளக்கம் கொடுக்கிறார். 'கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் குடும்பமாக உழைப்பதால் குடும்ப கட்சி' என்கிறார். அதில் இருந்து யாராவது ஒருவரை முதல்வர் ஆக்குவாரா?
தி.மு.க., ஆட்சியில் அரிசி, மளிகை என அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டன. நாங்கள் கொரோனா காலத்தில் கூட விலையேறாமல் பார்த்துக் கொண்டோம்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
வாசகர் கருத்து