'உலக வங்கியில் ரூ.9 லட்சம் கோடி கடன் இருக்கு': சொத்து பட்டியலில் வேட்பாளர் ரகளை
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரைகுறை தகவல்களுடன் சொத்து விபரங்களை தாக்கல் செய்வதாகவும், இவற்றை, அதிகாரிகளால் முழுமையாக சரிபார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மார்ச் 20ல் துவங்கிய வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. இதில் தேர்தல் கமிஷன் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விபரங்கள், வழக்கு விபரங்களை தாக்கல் செய்கின்றனர்.
சந்தேகம்
இவ்வாறு வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து மற்றும் வழக்கு விபரங்களை, பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது. இந்த விபரங்களை பொதுமக்கள் மட்டுமின்றி சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் அவரவர் கோணத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் பிரபலமான வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் என்ன என்பதை அறிவதில் பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த விபரங்களை பார்த்தவர்கள் மத்தியில் பரவலாக சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
வேட்பு மனுவில் சொத்தின் மதிப்பு என குறிப்பிடப்பட்ட தொகை, தற்போதைய நிலவரத்துக்கு சம்பந்தம் இல்லாத வகையில் காணப்படுகிறது. இது இந்த வழிமுறையை ஏற்படுத்தியதற்கான நோக்கத்தை சிதைப்பதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி. பாலமுருகன் கூறியதாவது:
பொதுவாக வங்கிகள் கடன் கொடுக்கும்போது, அதில் சம்பந்தப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு என்ன என்பதற்கு மதிப்பீட்டாளர்களின் அறிக்கை பெறப்படுகிறது. இதேபோன்று, அரசு ஒப்பந்தங்கள் பெறுவது போன்ற பணிகளின் போது, விண்ணப்பதாரரின் செல்வ நிலை குறித்த தாசில்தார் அறிக்கை பெறப்படுகிறது.
இதுபோன்ற தொழில் முறை சான்றளிப்பு எதுவும் இன்றி, வேட்பாளர்கள் தங்கள் விருப்பப்படி சொத்து மதிப்புகளை தாக்கல் செய்வது சரியான நடைமுறை இல்லை. உதாரணமாக சென்னையில், 1 கோடி ரூபாய்க்கு குறைவாக சொத்து கிடைக்காத இடத்தில், 50 லட்சம் ரூபாய் என்று ஒரு வேட்பாளர் தகவல் அளிப்பது அபத்தமாக உள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதை முழுமையாக சரி பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, சொத்து விபரங்களை மதிப்பீட்டாளர் அறிக்கையுடன் தாக்கல் செய்யும் நடைமுறையை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பதவி இழப்பர்
வேட்பாளர்கள் சொத்து விபரங்கள் குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில், தங்கள் மீதுள்ள வழக்குகள், தண்டனை பெற்றிருந்தால் அதன் விபரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்.
தனக்கும், தன் வாழ்க்கை துணைக்கும், தன்னை சார்ந்திருப்போருக்கும், அசையும் சொத்து, அசையா சொத்து, கடன் எவ்வளவு உள்ளது என்ற விபரத்தை சுய சான்றுடன் தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளரின் சொத்து விபரங்களை, வருமான வரித்துறையினர் ஆய்வு செய்வர். வேட்பாளர் தவறான தகவல்களை தெரிவித்திருந்தால், யார் வேண்டுமானாலும், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். தவறான தகவல் என்றால் அவர் வகிக்கும் பதவியை இழக்க நேரிடும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வேட்பு மனுவில் சொத்து விபரங்கள் ஆய்வு செய்யப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மோகன்ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் தன் வேட்பு மனுவில், 1,977 ரூபாய் ரொக்கம், 200 கோடி அமெரிக்க டாலர்கள் அதாவது, 16,000 கோடி ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உலக வங்கியில், 9 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து, மோகன்ராஜ் கூறியதாவது: கடந்த, 2014ல் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. சொத்து விபரங்களை தவறாக குறிப்பிட்டால், என்ன தண்டனை என்று கேட்டு, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினேன். தவறான தகவல் அளித்தால், 6 மாதம் சிறை என, தேர்தல் கமிஷன் பதில் அளித்தது. அதன்பின், இந்த தவறு தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகளாக மாற்றப்படுவதால், இதில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும், 2ஜி ஊழலை சுட்டிக்காட்டும் வகையில், ஒரு தேர்தலில் நான் தாக்கல் செய்த மனுவில், 1.76 லட்சம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டேன். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா குறித்த புத்தகத்தில், அவருக்கு, 200 கோடி அமெரிக்க டாலர் அதாவது, 16,000 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார். இதை சோனியா மறுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில், தற்போதைய வேட்பு மனுவில், இந்த விபரங்களை குறிப்பிட்டு இருக்கிறேன். மேலும், தமிழக அரசின் கடன் தொகை, 9 லட்சம் கோடி என்பதை சுட்டிக்காட்ட அந்த தொகையையும் கூறியிருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து