திருமாவும் சீமானும் வராததால் எங்களிடம் வந்தார்: பழனிசாமியை சாடிய அன்புமணி

"தமிழகத்தை இந்த இரு கட்சிகளும் 55 ஆண்டுகாலம் சுரண்டி நாசப்படுத்திவிட்டன. இங்கு ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம்" என, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க., இன்று வெளியிட்டுள்ளது. இதன் பின், செய்தியாளர்களிடம் பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வரவேண்டும் என முதன்முதலில் வழக்கு போட்டது, பா.ம.க.,தான். உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் போட்டோம். ஆனால், '50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்' என தி.மு.க., தவறான வழக்கை போட்டது.

எங்கள் கோரிக்கையின் அடிப்படையில் தான் தீர்ப்பு வந்தது. தி.மு.க., மட்டும் தவறான அணுகுமுறையை கையாளாமல் இருந்திருந்தால் எப்போதோ இடஒதுக்கீடு வந்திருக்கும்.

சண்டை போட்ட தி.மு.க.,

தி.மு.க., கொள்கையும் காங்கிரஸ் கொள்கையும் ஒன்றா. காங்கிரஸ் கொள்கையும் கெஜ்ரிவால் கொள்கையும் ஒன்றா... கேரளாவில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுகளும் அடித்துக் கொள்கின்றன. ஆனால், கூட்டணியில் உள்ளனர். எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 2004ல் பா.ம.க., அங்கம் வகித்தது. அப்போது, 'எட்டு அமைச்சர்கள், இந்த இலாகா வேண்டும்... அந்த இலாகா வேண்டும்' என்று தி.மு.க., சண்டை போட்டது. ஆனால், 'குறைந்தபட்ச செயல்திட்டத்தில் 27 சதவீத ஓ.பி.சி., இடஒதுக்கீட்டை மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் கொண்டு வரவேண்டும்' என ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.

எங்கள் கோரிக்கையை 2 ஆண்டுகளாக காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ராமதாஸ் கூறினார். அப்போது, தி.மு.க., அமைச்சர்கள் வாயை முடிக் கொண்டு இருந்தார்கள். சோனியாவும் ராமதாஸை சமாதானப்படுத்தினார். எங்கள் கொள்கையில் உறுதியாக நின்று சாதித்தோம்.

என்.டி.ஏ.,வில் இணைந்தது ஏன்?

பா.ஜ.,வின் கொள்கைகள் வேறு. எங்களின் கொள்கைகள் வேறு. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்க காரணம், 55 ஆண்டுகாலம் தமிழகத்தை இந்த இரு கட்சிகளும் சுரண்டி நாசப்படுத்திவிட்டன. இதற்கு ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காக இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறோம்.

'2026 தேர்தலுக்கேற்ப 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்போம்' எனத் தொடர்ந்து பேசி வந்துள்ளேன். மக்கள் நலன் கருதித் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகாலம் பா.ஜ., அரசுக்கு ஆதரவு கொடுத்தோம்.

'நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும்' என்பதற்காக தி.மு.க.,வை அண்ணா தொடங்கினார். அண்ணாவையும் பெரியாரையும் மறந்துவிட்டார்கள். நல்ல வியாபாரிகளாக மாறிவிட்டார்கள். இங்கு நிர்வாகமே நடக்கவில்லை.

வேடந்தாங்கல் பறவையா?

எங்களை வேடந்தாங்கள் பறவைகள் என்கின்றனர். நாங்கள் வேடந்தாங்கல் பறவைகள் அல்ல, சரணாலயம். முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவர்களின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள உதவி செய்தோம். 'சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள்' என்று பலமுறை வலியுறுத்தினோம். போராட்டம் நடத்தினோம்.

தேர்தலுக்கு முன்பு வரையில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை இழுத்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு கடைசி நாளில் மதியம் 1 மணிக்கு நிறைவேற்றினார். அன்று நடந்ததைப் பற்றி என்னால் சொல்ல முடியாது.

இடஒதுக்கீடு கொடுக்க நினைத்திருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே கொடுத்திருக்கலாம். இது சமூக நீதிக்கு அழகல்ல. தணிகாச்சலம் ஆணையத்தின் பரிந்துரை இருந்திருந்தால் இந்த மசோதா நிலைத்து நின்றிருக்கும்.

பழனிசாமி பேசினாரா?

அதையும் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. மீண்டும் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஒருமுறையாவது பழனிசாமி பேசியிருப்பாரா. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும் பேசவில்லை. இன்று பேசுவதற்கு அவருக்கு தைரியம் உள்ளதா?

10.5 சதவீத இடஒதுக்கீட்டால் தோற்றோம் என்றார்கள். அது இருந்ததால் தான் 66 இடங்களில் வென்றார்கள். அவர்கள் ஆதரவால் நாங்களும் வெற்றி பெற்றோம். 15 தொகுதிகளில் பா.ம.க., வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஐந்து தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம்.

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக கடந்த 6 மாதங்களாக வி.சி.,யிடம் பழனிசாமி பேசிக் கொண்டிருந்தார். ஐந்து முறைக்கு மேல் கூட்டணிக்கு வருமாறு கேட்டார். சீமானையும் கேட்டார். கடைசியில் யாரும் வரவில்லை. அதன் பிறகு தான் எங்களிடம் வந்தார்.

ஆனால், நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். இரண்டு பேரும் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றனர். அண்ணாவின் மதுவிலக்கு கொள்கை, சமூகநீதி, கல்வி, சுகாதாரம் என எந்தக் கொள்கையையும் அவர்கள் கடைபிடிப்பது இல்லை.

தி.மு.க.,வில் சில அமைச்சர்கள் பரவாயில்லை. பெரும்பாலானவர்கள் வியாபாரிகளாக உள்ளனர். மக்களும் வெறுப்பில் உள்ளனர். நாங்களும் வெறுப்பில் இருக்கிறோம். தேர்தலுக்காக எங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

ஸ்டாலினை பார்த்தேன், ஆனால்?

கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தாங்கள் கொடுத்ததாக அ.தி.மு.க., சொல்கிறது. அதைக் கொடுக்காமல் ஏமாற்றலாம் என நினைத்தார்கள். ஆனால், 'கூட்டணி முக்கியமில்லை, 10.5 இடஒதுக்கீடு தான் வேண்டும்' என உறுதியாக இருந்ததால், ஆட்சியின் கடைசி நாளில் அரைகுறையாக நிறைவேற்றினர். அந்தக் குறையை சரிசெய்து 2 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டை தி.மு.க., நிறைவேற்றியிருக்கலாம். முதல்வரை நேரில் சென்று பார்த்தேன். பத்து முறை போனில் பேசினேன். 'சரிங்கய்யா' என்றார். அந்தக் கோரிக்கை குப்பையில் கிடக்கிறது. தமிழகத்தில் 370 சாதிகள் உள்ளன. அனைத்து சாதிகளுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். சமநிலை கிடைக்க வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகிறேன். சமூகநீதி இல்லாத சமநிலை இல்லாத சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


Palanisamy T - Kuala Lumpur, மலேஷியா
30-மார்-2024 08:41 Report Abuse
Palanisamy T கடல் கடந்துச் சென்ற தமிழர்
Karthikeyan K Y - Chennai, இந்தியா
28-மார்-2024 11:56 Report Abuse
Karthikeyan K Y தன மேல் ஊழல் குற்றச்சாட்டு இன்னும் நிலுவயில் இருக்கு மற்றபடி இவரும் இவரின் தந்தையும் என்ன வன்னியர்களுக்காக செய்தார்கள் தங்கள் குடும்பத்துக்கு செய்து கொண்டார்கள் இப்போது மருமகளும் வந்தாச்சு அப்புறம் பேரன், இவர் ஊழலில் இருந்து தப்பிக்க பதவி சுகத்தை அனுபவிக்க இவர் குடும்பம் அனுபவிக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கட்சியை அடமானம் வைப்பார்கள் கொள்கை எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது பேச்சை பாரு
Mani . V - Singapore, சிங்கப்பூர்
28-மார்-2024 05:54 Report Abuse
Mani . V அன்புமணியின் கை பொசிசனைப் பார்த்தால், "அவர்கள் இவ்வளவு கொடுத்தார்கள்" என்று சொல்வது மாதிரி இருக்கிறது.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்