வாளி சின்னம் ஒதுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் பன்னீர் மனு
வரும் லோக்சபா தேர்தலில், பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் தரக்கூடாது என்றும், சின்னம் முடக்கப்பட்டால், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் தனக்கு, வாளி சின்னம் வழங்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில், பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். அவர், பா.ஜ., கூட்டணியில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதற்கான வேட்பு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.
அவர் இரட்டை இலை சின்னத்திலோ அல்லது தனிச் சின்னத்திலோ போட்டியிட விரும்புகிறார். இதை வலியுறுத்தும் விதமாக நேற்று டில்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில், இரு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, இம்மனுக்களை அளித்துள்ளார்.
'நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., எனவே, இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் வழங்க வேண்டும்' என ஒரு மனுவிலும், 'பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தரக்கூடாது.
அ.தி.மு.க.,வுக்கான உரிமை கோரி நடைபெற்று வரும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை காரணம் காட்டி, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், வரும் லோக்சபா தேர்தலில், எங்களுக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும்' என்று மற்றொரு மனுவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து