'ஆண்டவன் சொன்னார் அருணாசலம் நின்றார்'
'ஆண்டவன் சொன்னார்... அருணாசலம் நம்முடன் வேட்பாளராக நின்றார்' என்று, பொள்ளாச்சி ஜெயராமன், ரஜினி ஸ்டைலில் பேசியது, திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் அருணாசலம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, சம்பந்தி வழி உறவினர்.
'மாஜி'க்கள் சீட் வேண்டாமென ஒதுங்கியதால், திருப்பூர் தொகுதிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீடித்தது. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் பரிந்துரைப்படி, அருணாசலம் அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தபோது, ''யோவ் நீ ராசிக்காரன்யா... உனக்கு நல்ல நேரம்னு நினைக்கிறேன்,'' என்று பழனிசாமி உற்சாகமூட்டினார். திருப்பூர் மாநகர் மாவட்ட அலுவலகத்தில், வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
கட்சியின் தேர்தல் பிரிவு செயலரான பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''ஆண்டவன், பழனிசாமியிடம் சொன்னார். அவரது விருப்பப்படி, அருணாசலம் வேட்பாளராக நின்றார். ஆண்டவன் சொன்னதைத்தான் பழனிசாமி செய்வார். திரு 'அண்ணாமலை' தொலைவாக இருந்தாலும், அங்கு வீற்றிருக்கும் அருணாசலம் நம்முடன் தான் இருக்கிறார். ஆண்டவனே நம்முடன்தான் இருக்கிறார்,'' என்று, ரஜினிகாந்த் ஸ்டைலில் பேசினார்.
அதுவரை, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தொண்டர்கள் உற்சாகமாகி, காது அடைக்கும் அளவுக்கு கரவொலி எழுப்பினர்.
வாசகர் கருத்து