2026 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.,வே இருக்காது: பிரேமலதா கணிப்பு

"பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எனக் கூறிவிட்டு, தகுதிவாய்ந்த பெண்களுக்குத் தான் என்றார்கள். நீங்கள் தகுதிவாய்ந்த முதல்வர் இல்லை என்கிறோம்" என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேசினார்.
திருச்சியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: அ.தி.மு.க.,வும் தே.மு.தி.க.,வும் இயற்கையான கூட்டணி. இது வெற்றிக் கூட்டணி. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. அவர் இல்லாமல் பொதுக்கூட்டத்துக்கு வந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என மூவருமே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்தவர்கள். அவர்கள் மறைவும் டிசம்பர் மாதத்திலேயே அமைந்ததுதான் கடவுளின் தீர்ப்பு.
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, சந்திக்கும் முதல் தேர்தல் இது. நான் பொதுச்செயலரான பிறகு பங்கேற்கும் முதல் தேர்தல். இந்தத் தேர்தலில் இருவரும் சாதித்துக் காட்டுவோம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மக்களுக்கு எந்தவித தீமையையும் சொல்லித் தரவில்லை. மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள் ரவுடியிஸத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகின்றனர்.
இதே கூட்டணி 2021ல் அமைந்திருந்தால் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும். அன்றைக்கே பழனிசாமியின் ஆட்சி அமைந்திருக்க வேண்டும். சற்று காலதாமதமாகிவிட்டது. 2021ல் பழனிசாமி வென்றிருந்தால் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்திருக்கும். 2021ல் வர வேண்டிய வெற்றி 2026ல் வரும். மீண்டும் பழனிசாமி முதல்வர் ஆவார்.
இரண்டு நாள் வரையில் அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள் எல்லாம், 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' எனக் கிளம்பிவிட்டனர். நாங்கள் ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையில் இறுதிவரையில் உறுதியாக இருப்போம்.
கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், பழனிசாமி. இந்தக் கூட்டணியில் இறுதிவரை உறுதியோடு இருப்போம் என அவரிடம் கூறினேன்.
தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்போம் என தி.மு.க., சொல்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மணல் கொள்ளை, கஞ்சா விற்பனை, டாஸ்மாக் வியாபாரம் என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகளவில் நடந்து கொண்டிருக்கிறது.
கஞ்சா கடத்தும் ரவுடிகளாக தி.மு.க.,வினர் உள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் தி.மு.க.,வினரை கைது செய்ய ஸ்டாலின் தயாரா. மழை வெள்ள பாதிப்பில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
பழனிசாமி ஆட்சியில் கொரோனாவும் வந்தது; வெள்ளமும் வந்தது. அந்த நேரத்தில் நிர்வாக சீர்கேட்டை தூக்கி நிறுத்தியவர். இப்போது, சென்னையை விட்டு வேறு எங்காவது கிராமத்துக்கு வந்துவிடலாமா என யோசிக்கிறோம். அத்தனை சாலைகளும் படுகுழியாகிவிட்டது.
மத்திய அரசை குறை கூறும் தி.மு.க., பத்தாண்டுகள் ஆட்சி நடத்திய அ.தி.மு.க.,வை பார்க்க வேண்டும். மத்திய அரசை சார்ந்து வாழாமல் தமிழக நிதியில் இருந்து சிறந்த ஆட்சியை பழனிசாமி ஏற்படுத்திக் கொடுத்தார். மத்திய அரசை குறை சொல்லும் நீங்கள் ஏன் முதல்வராக இருக்கிறீர்கள்.
முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டு மத்திய அரசை பதவியேற்க சொல்லுங்கள். மழைநீர் வடிகாலில் 90 சதவீதத்தை சீர்படுத்திவிட்டோம் என்றார்கள். இன்னும் 10 சதவீத வேலை கூட முடியவில்லை. பொய் சொல்லியே தி.மு.க., வாழ்கிறது.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எனக் கூறிவிட்டு, தகுதிவாய்ந்த பெண்களுக்குத் தான் என்றார்கள். நீங்கள் தகுதிவாய்ந்த முதல்வர் இல்லை என்கிறோம். லோக்சபா தேர்தல் வருகிறது என்றதும் பெட்ரோல் டீசல் விலை, சிலிண்டர் விலையைக் குறைப்போம் என தி.மு.க., பொய் சொலகிறது.
சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதியான, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுக் கொடுத்துவிட்டார்களா.. சட்டம் ஒழுங்கை சீர்செய்தார்களா. பெண்களுக்கு ஆயிரம் கொடுப்பதிலும் ஊழல் நடக்கிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
ஆனால், ஒரு பவுன் தங்கம் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாமல் பெண்கள் தவிக்கிறார்கள். பெட்ரோல்-டீசல் எல்லாம் மத்திய அரசின் திட்டம். இதுவரை தி.மு.க.,விடம் ஏமாந்தது போதும்.
மத்திய அரசு சி.ஏ.ஏ., சட்டத்தை அமல்படுத்த உள்ளது. இஸ்லாமியர்களுக்கு உற்ற தோழர்களாக இந்தக் கூட்டணி, எந்தக் காலத்திலும் சி.ஏ.ஏ.,வை அமல்படுத்த விடாது. எந்த வகையில் சி.ஏ.ஏ.,வை கொண்டு வருகிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் பத்திர நன்கொடை மூலம் 662 கோடி ரூபாயை தி.மு.க., வாங்கியிருக்கிறது. லாட்டரி மார்ட்டினிடம் இருந்து 562 கோடி ரூபாயை தி.மு.க., வாங்கியுள்ளது. இது ஒரு மறைமுக ஊழல். தமிழகத்திலேயே அதிக நன்கொடை வாங்கிய கட்சி, தி.மு.க.,
தமிழகத்தில் தி.மு.க. காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என விஜயகாந்த் சொல்வார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எல்லாவற்றிலும் ஊழல் செய்தார்கள். அதனால் தான் ஆட்சிக்கே வர முடியாமல் தவிக்கிறது. 2026க்குப் பிறகு தமிழகத்தில் தி.மு.க.,வே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
வாசகர் கருத்து