பா.ஜ., என்னை பிரசாரத்துக்கு அழைக்கவில்லை: சுப்ரமணியன் சுவாமி

"இரண்டு முறை தி.மு.க., ஆட்சியை கவிழ்த்திருக்கிறேன். இப்போது அதற்கான தேவை ஏற்படவில்லை" என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
மதுரையில் பா.ஜ., நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க சுப்ரமணியன் சுவாமி வந்திருந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பா.ஜ., வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் நிச்சயமாக வெற்றி பெறுவார். கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
தமிழகத்தில் தி.மு.க., எதிர் பா.ஜ என களம் மாறியுள்ளதா என்று கேட்டால், எல்லாருக்கும் கனவு இருகிறது. அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தலாம். ஆனால், கட்சியின் அமைப்பு வலுவாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். விளம்பரம் செய்தால் போதுமா... மக்கள் நம்ப வேண்டும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் பொருளாதாரீதியாக நாடு முன்னேற்றம் அடையவில்லை. வெளியுறவு கொள்கையிலும் அரசு சிறப்பாக செயல்படவில்லை. சீன ஆக்ரமிப்பை தடுக்கவில்லை. மாலத்தீவுடனும் பிரச்னை உள்ளது. இதற்கெல்லாம் மோடி ஒன்றுமே செய்யவில்லை.
பா.ஜ., அழைத்தால் பிரசாரத்துக்கு செல்வேன். ஆனால், என்னை அவர்கள் அழைக்கவில்லை. மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரக் கூடாது. இரண்டு முறை தி.மு.க., ஆட்சியை கவிழ்த்திருக்கிறேன். இப்போது அதற்கான தேவை ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து