தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி.,: பின்னணி என்ன?

ஈரோடு ம.தி.மு.க., எம்.பி., கணேசமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு லோக்சபா தொகுதியின் எம்.பி., ஆக இருக்கும் கணேசமூர்த்தி, ம.தி.மு.க., பொருளாளராக இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க.,வின் சிட்டிங் தொகுதியான ஈரோட்டில் தி.மு.க., சார்பாக பிரகாஷ் என்பவர் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை கணேசமூர்த்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு, மேல் சிகிச்சைக்காக அவரை கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து ம.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கடந்த ஒரு வாரமாக கடுமையாக மனஉளைச்சலில் கணேசமூர்த்தி இருந்தார். சிட்டிங் தொகுதியை ஈரோடுக்கு விட்டுக் கொடுத்ததில் அவருக்கு சற்று மனவருத்தம் இருந்துள்ளது. தவிர, குடும்ப பிரச்னையும் ஒரு காரணம் என்கிறார்கள். கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் விரைவில் வெளியாகும்" என்றார்.





வாசகர் கருத்து