கிருஷ்ணசாமி - ஜான்பாண்டியன் தென்காசியில் முதல்முறை மோதல்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில், 5 முறை போட்டியிட்டு 1996, 2011 தேர்தல்களில் எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர். தென்காசி லோக்சபா தனித் தொகுதியில் 1998 முதல் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டவர்.
தற்போது 7வது முறையாக அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுகிறார். அவர் தனித்துப் போட்டியிட்ட தேர்தலில் கூட, 20 சதவீத வாக்குகளை பெற்றார். கடந்த முறை அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று லட்சத்து 55,000 ஓட்டுகள் பெற்றார்.
நீண்ட காலமாக தொடர்ந்து பா.ஜ., அணியில் இருந்து வந்தவர் பா.ஜ.,வின் தேர்தல் அணுகுமுறை மீது குற்றம்சாட்டி சமீபத்தில் அ.தி.மு.க., அணியில் இணைந்தார்.
தென்காசியில் பா.ஜ., அணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி துவங்கப்பட்ட போது அதன் இளைஞர் அணியில் பொறுப்பில் இருந்தார். 1989ல் பெரம்பலுாரில் போட்டியிட்டார்.
இரண்டு முறை எழும்பூர் சட்டசபை தொகுதியில் நின்று தோல்வியடைந்தார். இதுவரை தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
தி.மு.க.,வில் சிட்டிங் எம்.பி., தனுஷ்குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு சங்கரன்கோவிலை சார்ந்த அரசு டாக்டர் ராணி போட்டியிடுகிறார். இவர், முன்னாள் எம்.எல்.ஏ., துரைராஜின் தம்பி மகள் ஆவார்.
பா.ஜ., மாநில ஸ்டார்ட் அப் அணி தலைவரான தென்காசி தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லுாரை சேர்ந்த ஆனந்தன் கடந்த ஓராண்டாக தேர்தல் பணிகளை செய்து வந்தார். கடைசி நேர கூட்டணியால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டு த.ம.மு.க., தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார்.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் தலைவர்களான கிருஷ்ணசாமியும், ஜான்பாண்டியனும் நேருக்கு நேராக இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை.
முதல் முறையாக இரு தலைவர்களும் போட்டியிடுவதால் தென்காசி தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாய ஓட்டுகளை இரு தலைவர்களும் பிரித்துக் கொள்வதால் பொது ஓட்டுக்களை அதிகம் பெறுபவர்களே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
கடந்த முறை போல இல்லாமல், ஆதரவாளர்களை முடுக்கி விட்டு வெற்றியை வசப்படுத்தும் வியூகத்தை வகுத்து வருகிறார் கிருஷ்ணசாமி.
வாசகர் கருத்து