தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கரூர் எங்கே?
லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட மாவட்டங் களுக்கான வாக்குறுதியில், கரூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு இருப்பது, தி.மு.க.,வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மாவட்ட திட்டங்கள், கோரிக்கை குறித்து வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், கரூர் மாவட்டத்திற்கு, 37 வாக்குறுதிகள் இடம் பெற்றன. வரும் லோக்சபா தேர்தலுக்காக கடந்த, பிப்., 10ல் திருப்பூரில் நடந்த கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்புகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
கரூர் மாவட்டத்தில் முக்கிய தொழிலான ஜவுளி, பஸ் கட்டுமானம், கொசுவலை தொழில்களில் சங்கங்களின் கோரிக்கை மனுக்களை பெற்றதாக தெரியவில்லை. சில வணிகர் சங்கங்களின் மனுக்கள் மட்டும் பெறப்பட்டுள்ளன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை, கரூர் மாவட்டம் சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோர் அளித்துள்ளனர்.
ஆனால் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கரூரை மறந்து விட்டனர்.
செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற பின், இங்கு, கட்சி பணிகளை கவனிக்க யாரும் நியமனம் செய்யப்படவில்லை. மாவட்ட தி.மு.க.,வில் 'தலை' இல்லாமல், அனைத்து பணிகளும் தடுமாறுகின்றன. அதனால் தான் தேர்தல் அறிக்கையில் கரூர் விடுபட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.
இது குறித்து குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம் கேட்ட போது, ''மாவட்ட கோரிக்கை குறித்து அறிக்கை குழுவிடம் மனு அளிக்கப்பட்டது. ஏன் இடம் பெறவில்லை என்று தெரியவில்லை. அதுபற்றி விசாரிக்கிறேன்,'' என்றார்.
வாசகர் கருத்து