தமிழிசை போல பதவி விலகுவாரா கவர்னர்: திருமாவளவன் கேள்வி
பொன்முடி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என, ஜனாதிபதிக்கு வி.சி., தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கவர்னர் விதித்த தடைகளையெல்லாம் மீறி உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பேற்றுள்ளார். இது, தி.மு.க., அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. ஆனால், 'உச்ச நீதிமன்றம் தண்டனையைத் தான் நிறுத்தி வைத்திருக்கிறது. அவரை நிரபராதி என்று சொல்லவில்லை' என கவர்னர் குதர்க்கமான ஒரு விளக்கத்தைக் கொடுத்தார்.
மீண்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கவர்னரை கடுமையாக கண்டித்தது. இப்போது பொன்முடிக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
உச்சநீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளிப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்வது என மரபுகளை மீறி கவர்னர் செயல்படுகிறார். அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தால் தமிழிசையை போல, பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதுதான் முறை.
அதை விட்டுவிட்டு அரசியல்வாதியைப் போல செயல்படுவதும், அரசமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதும் ஏற்புடையது அல்ல.
உச்ச நீதிமன்றம் கண்டித்தது போல இதுவரை எந்த கவர்னரையும் உச்ச நீதிமன்றம் இதுவரை கண்டித்தது இல்லை. இதன் பிறகும் கவர்னர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே, அவர் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கவர்னர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து