தி.மு.க.,வின் 38 எம்.பி.,க்களால் என்ன பலன்: எஸ்.பி.வேலுமணி கேள்வி
"லோக்சபா தேர்தல் முடிவுகள் 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும். மீண்டும் முதல்வராக பழனிசாமி வருவார்" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் கோவையில் ராமச்சந்திரனும் பொள்ளாச்சியில் கார்த்திக் கந்தசாமியும் நீலகிரியில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர்.
தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளுக்கும் விளவங்கோடு தொகுதிக்கும் அ.தி.மு.க., கூட்டணியில் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் ஏழாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. எங்கள் கட்சியில் 2 கோடிப் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். லோக்சபா தேர்தலில் வெற்றி உறுதி.
தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆண்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. தேர்தலில் வெற்றி பெறப் போகும் எங்கள் வேட்பாளர்கள், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மிகப் பெரிய வளர்ச்சியை கொண்டு வருவார்கள்.
கடந்த ஆட்சியில் சாலைகள், பாலங்கள், கல்வி என ஏராளமான திட்டங்களை முதல்வராக இருந்த பழனிசாமி கொண்டு வந்தார். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் எந்த திட்டத்தையும் தி.மு.க., கொண்டு வரவில்லை.
அந்தவகையில், கோவை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கோவை, பொள்ளாச்சி, நீலகிரி மட்டுமல்ல, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இந்த வெற்றி சட்டசபை தேர்தலில் எதிரொலித்து மீண்டும் முதல்வராக பழனிசாமி வருவார்.
மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்தாலும் கோவைக்கு அதிக திட்டங்களை கொண்டு வந்தது, அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., ஒரு வாக்குறுதியை கொடுத்தால் அது நிச்சயம் நிறைவேறும் என மக்களுக்குத் தெரியும்.
கடந்த முறை தி.மு.க., சார்பில் 38 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றும் எதையும் செய்யவில்லை. லோக்சபா தேர்தல் மூலம் தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மீட்டெடுப்பார்கள்.
இவ்வாறு வேலுமணி தெரிவித்தார்.
வாசகர் கருத்து