பரிதாப பன்னீர்: பா.ஜ., தலைக்கனம் தகுமா?
தே.ஜ., கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், முற்றிலும் அதிருப்தியாக இருக்கின்றனர் என்று தான் தகவல் வெளியாகி உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக, பன்னீர்செல்வம் பற்றி மட்டும் தன் பேட்டியில் அண்ணாமலை பேசவில்லை, 'பன்னீர்செல்வம் அவருடைய நிலைப்பாட்டை அவரே அறிவிப்பார்' என்று மட்டும் சொன்னார்.
நேற்று தன் ஆதரவாளர்களுடன்சென்னையில் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், ஏதேனும் ஒரு முடிவை விரைவில் அறிவிப்பார் என, பத்திரிகையாளர்கள் காத்திருக்க, ஆலோசனை கூட்டம் இழுத்துக்கொண்டே போனது. காரணம், பா.ஜ., மீது உள்ள அதிருப்தி தான் என, கூறப்படுகிறது.
மரியாதை குறைவு
அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட நாளில் இருந்தே, பன்னீர்செல்வம், பா.ஜ.,வின் உறுதியான ஆதரவாளராக இருந்து வருகிறார். அவர் முன்னாள் முதல்வர் என்ற முறையில், கூட்டணி பேச்சு துவங்கிய உடன் அவரை தான் முதலில் பா.ஜ., அழைத்து பேசும் என, எதிர்பார்த்தார். ஆனால், அ.தி.மு.க.,வுடன் சமரச மோகத்தில் இருந்த பா.ஜ., அவரை கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, த.மா.க.,விற்கு தான் முக்கியத்துவம் கொடுத்தது. சேலம் பொதுக்கூட்டத்திற்கு முன், பிரதமர் மோடி பல முறை தமிழகம் வந்து சென்றபோதும், பிரதமரை சந்திக்க அவர் அழைக்கப்படவில்லை.
இதையெல்லாம் அவருடைய ஆதரவாளர்கள் மரியாதை குறைவாகவே பார்த்தனர். பல இடங்களில், பல நபர்கள் வாயிலாக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அ.தி.மு.க.,வை இழுக்க பா.ஜ., நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பின் தான் பன்னீர்செல்வத்தை கூட்டணி பேச அழைத்தனர். அப்போது அவருக்கு நான்கு தொகுதி உறுதிசெய்யப்பட்டதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், பா.ம.க., வந்தவுடன் பா.ஜ.,வின் தொனியே மாறிவிட்டது.
சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் வருவதற்கு முன்பாகவே அவரை பேச சொன்னார்கள். ஒரு முன்னாள் முதல்வரை ஒரு சாதாரண கட்சி பேச்சாளர் பேசும் நேரத்தில் பேச சொன்னதை அவருடைய ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை. அவர் பேசி கொண்டிருந்தபோதே, தமிழக பா.ஜ., துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், இரண்டு முறை குறுக்கிட்டு, பேச்சை முடிக்கும்படி கூறினார். ஜெயலலிதா இருந்த மேடையில், பன்னீர்செல்வம் விருப்பம் போல் பேச அனுமதிக்கப்பட்டதை இங்கே நினைவுகூர வேண்டும்.
வறுத்தெடுத்தனர்
மேலும் அவரை வைத்துக் கொண்டே, பா.ஜ., கூட்டணி தலைவர்கள் இரு திராவிட இயக்கங்களையும் வறுத்தெடுக்க, பன்னீர்செல்வம் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார்.
அந்த அவமானத்தையும் பொறுத்துக் கொண்டு, கூட்டணி பேச்சுக்கு சென்றவரிடம், பா.ஜ.,வினர், அவர் ஒரு முன்னாள் முதல்வர் என்ற எண்ணமே இல்லாமல் நடந்து கொண்டதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பொருமுகின்றனர்.
கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 10 தொகுதிகள் கொடுக்க வேண்டியகட்டாயம் ஏற்பட்டது. தாங்களும், 20 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிட்டால் கவுரவமாக இருக்காது என்ற நிலையில், பன்னீர்செல்வத்தின் தொகுதிகளில் கைவைக்க முடிவு செய்தனர்.
பன்னீர்செல்வத்திடம், 'நான்கு தொகுதிகள் வேண்டுமானால் தாமரையில் போட்டியிட வேண்டும். சொந்த சின்னம் என்றால், ஒரே தொகுதி தான்' என நிர்பந்தித்தனர்.
தாமரையில் போட்டியிட்டால், தான் 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என அமைத்து போராடி வருவது அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும். ஒரே தொகுதி என்றால் தன் ஆதரவாளர்களை திருப்திபடுத்த முடியாது என்ற தர்மசங்கடத்தில் பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுள்ளார். அதனால் தான் நீண்ட ஆலோசனை கூட்டமும் நடந்தது என கூறப்படுகிறது.
ஜெ., காலத்தில்...
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா இருந்தவரை, அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தார் பன்னீர்செல்வம். ஜெ., சிறைக்கு சென்றபோது அவரை முதல்வராக்கினார். ஜெ., இருந்தபோதும் தேர்தல் வியூகம் அமைத்தல், கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பேச்சு அனைத்தும், பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவே மேற்கொண்டது.
கட்சியின் இன்றைய பொதுச் செயலர் பழனிசாமி உட்பட, அனைத்து நிர்வாகிகளும், அவர் கூறியதை கேட்டு செயல்பட்டனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்படி இருந்த பன்னீர்செல்வம் இன்று பா.ஜ.,வால் பந்தாடப்படுகிறாரே என்று அவர் தரப்பினர் வருத்தப்படுகின்றனர்.
'நிர்பந்தம் இல்லாமல் பா.ஜ.,வை ஆதரித்து வந்தோம். பா.ஜ., நிலை பலமானதும், தலைக்கனத்தில் ஆடுகின்றனர். இது தகுமா?' என்று கேட்கின்றனர்.
அரசியல் பார்வையாளர்கள், '2021ல் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி செய்த அதே தவறை பா.ஜ., இப்போது செய்கிறதா?' என்றும் வினவுகின்றனர்.
வாசகர் கருத்து