ஜெ., யின் கோட்டையை கைகழுவிய அ.தி.மு.க.,

தஞ்சாவூர் தொகுதி தி.மு.க.,வின் கோட்டை என இருந்தது. மறைந்த முதல்வரான ஜெயலிலதா 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அதை மாற்றி, அ.தி.மு.க.,வசம் கொண்டு வந்தார். 2014ல் நடந்த நகராட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., உறுப்பினரை வெற்றி பெற செய்து, நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி பெண் ஒருவரை மேயராக நியமித்தார்.
அதன்பின், நடந்த லோக்சபா தேர்தலிலும் பஞ்சாயத்து தலைவரை வேட்பாளராக நிறுத்தி, எம்.பி.,யாக்கினார். பின், 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
ஜெ., மறைவுக்குப் பின், 2019 இடைத்தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2022 மாநகராட்சி தேர்தல்களில் தி.மு.க., தஞ்சையை தக்க வைத்தது.
ஜெ., மறைவுக்கு கட்சியினரிடம் ஒற்றுமை இல்லாமல் போனதால், 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த த.மா.கா., கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதியை ஓதுக்கீடு செய்தனர். இதனால், தி.மு.க.,விடம் அ.தி.மு.க., தோல்வியை சந்தித்தது.
இம்முறை, அ.தி.மு.க.,வை சேர்ந்த நபருக்கு சீட் வழங்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், பழனிசாமியை நம்பி தேர்தலில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பழனிசாமி தஞ்சாவூருக்கு சமீபத்தில் வந்த போது 'பல்ஸ்'பார்த்து விட்டு தான், கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வுக்கு தொகுதியை வழங்கியதாக கட்சியினர் பேசுகின்றனர்.
மேலும், அ.தி.மு.க., ஒரே அணியாக இருந்த போது, 'மாஜி' அமைச்சர் வைத்திலிங்கம் ஏற்பாட்டில் ஒரு கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. ஆனால், அணிகள் பிரிந்தால், வைத்திலிங்கம் அந்த அலுவலகத்தை பூட்டி விட்டார். அதன் பின், கட்சிக்கு என்று ஒரு புதிய அலுவலகம் திறக்கவில்லை. தேர்தல் நேரத்திலும் ஒரு அலுவலகம் இல்லையே என கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து