நாங்கள் நினைப்பதை, ஸ்டாலின் கூறிவிட்டார்: செல்வப்பெருந்தகை
"தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, நாட்டுக்குத் தேவையான ஒன்று. பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை மறுபரீசிலனை செய்வோம் எனக் கூறியுள்ளனர். இது வரவேற்க வேண்டிய ஒன்று" என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னையில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதனை விமர்சித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, "2021 சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., கொடுத்த 99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேடைக்கு மேடை பொய் பேசுகின்றனர்" என்றார்.
இந்நிலையில், நாட்டுக்குத் தேவையான ஒன்று என தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை கூறியதாவது:
காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனைக்கு பின் நாளை இரவுக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை தேர்தல் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளோம்.
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, நாட்டுக்குத் தேவையான ஒன்று. பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை மறுபரீசிலனை செய்வோம் எனக் கூறியுள்ளனர். இது வரவேற்க வேண்டிய ஒன்று. காலை உணவு திட்டத்தை நாடு முழுதும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மத்திய குழு தயாரித்துள்ளது. நாங்கள் நினைப்பதை முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது, வரவேற்க வேண்டியது. தமிழக அரசின் காலை உணவு திட்டம், தெலங்கானா பி.ஆர்.எஸ்., கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முதன்மை வகிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து