கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து :பத்திரத்தை பார்த்ததும் ராமதாஸ் 'ஷாக்'

பா.ஜ.,வுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தைலாபுரம் தோட்டம் நோக்கி நேற்று காலை மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் சென்றார் அண்ணாமலை. காலை 6:40 மணிக்கு தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த பா.ஜ., நிர்வாகிகளை, அன்புமணி உள்ளிட்ட பா.ம.க., நிர்வாகிகள் வரவேற்றனர்.

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, அண்ணாமலை சால்வை அணிவித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார். தொடர்ந்து, ராமதாசின் மனைவி சரஸ்வதியின் காலில் விழுந்தும் ஆசி பெற்றார்.

பா.ம.க.,வின் ஆரம்ப கால போராட்டங்கள், கட்சிப் பணிகள், அரசியல் பயிலரங்கத்தின் செயல்பாடுகள், மது ஒழிப்பிற்காக நடத்திய போராட்டங்கள், சிறை தண்டனை பெற்ற விபரங்கள் உள்ளிட்டவற்றை அண்ணாமலையிடம் நினைவு கூர்ந்து ராமதாஸ் பேசினார்.

இதற்கு அண்ணாமலை, 'உங்களின் அரசியல் வாழ்க்கை குறித்து சினிமா படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் தெரியும்' என்றார்.

இந்நிலையில், செவ்வாய்க் கிழமையான நேற்று காலை 7:30 மணியிலிருந்து, 9:00 மணிக்குள் நல்ல நேரம் என்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடுவது குறித்து அண்ணாமலை, முருகன் ஆகியோர் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் கூறினர்.

இதற்கு அன்புமணி, 'அப்பா நல்ல நேரம் எது என்றெல்லாம் பார்க்க மாட்டார்' என்றார். அதற்கு ராமதாஸ், 'உங்கள் தரப்பு உணர்வுகளுக்கு நான் தடையாக இருக்க மாட்டேன். நீங்கள் சொல்லும் நேரத்தில் கையெழுத்து போடலாம்' என்றார்.

பின், காலை 7:30 மணியளவில், கையெழுத்து போடுவதற்காக, தயாராக டைப் செய்து எடுத்து வந்த ஒப்பந்த படிவத்தை ராமதாசிடம் அண்ணாமலை வழங்கினார்.

ஒப்பந்தத்தை படித்தவுடன், ராமதாசின் முகம் மாறியது. பா.ம.க.,வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்ெதந்த தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடுகிறது என்ற விபரம் இல்லை. கூடவே, ராஜ்யசபா தொகுதி குறித்த எந்த விபரமும் இல்லை.

இதனால் அருகிலிருந்த மகன் அன்புமணியிடம் விளக்கம் கேட்டார். அவர் அண்ணாமலையைப் பார்க்க, என்ன தம்பி, ஒப்பந்தம் ஒரு தரப்பா இருக்கே என ராமதாஸ் கேட்க, எழுந்து ராமதாஸ் அருகில் சென்ற அண்ணாமலை, காதில் ரகசியமாக எதையோ சொன்னார்.

அதன் பின்பும், ராமதாஸ் சமாதானம் அடையாததால் அன்புமணி, அண்ணாமலையையும், ராமதாஸையும், எல்.முருகனையும் அருகில் இருந்த தனி அறைக்கு அழைத்துச் சென்றார்.

பின், அண்ணாமலை டில்லி தலைவர் ஒருவருக்கு போன் போட்டுக் கொடுத்தார். அவர், ராமதாஸிடம் பேசினார். அதன்பின், அன்புமணியிடமும் பேசினார். ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருடைய முகங்கள் சிறுத்துப் போனபடியே அண்ணாமலையுடன் அறையில் இருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் ராமதாசும், அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.

பா.ஜ., - பா.ம.க., கூட்டணி ஒப்பந்தம் மற்றும் பா.ம.க., போட்டியிடும் 10 தொகுதிகள் குறித்த அறிவிப்பை ஒன்றாக வெளியிடும் நோக்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், ஒப்பந்தத்தில் எந்தந்த தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடுகிறது என்ற விபரம் இல்லை. இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட ராமதாஸ் தயக்கம் காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இரு தரப்பினரும் பேசும்போது, எந்தந்த தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடுவது என்பது குறித்து, பிரதமர் மோடியின் சேலம் வருகைக்குப் பின் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

பா.ஜ., நிர்வாகிகளுக்கு தோட்டத்தில் உபசரிப்பு

தைலாபுரம் தோட்டத்துக்கு காலையிலேயே வந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோருக்கு காலை உணவுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக, தைலாபுரம் தோட்டத்தில் கேசரி, இட்லி, பூரி, பொங்கல், சாம்பார், மெதுவடை ஆகியவை பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டன. அன்புமணியின் மனைவி சவுமியா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், விருந்தினர்களுக்கு காலை உணவு பரிமாறி உபசரித்தனர். இதனால், பா.ஜ.,வினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்