தேர்தல் விதிமீறல்: நிர்மலா சீதாராமன் மீது தி.மு.க., புகார்
தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது, தேர்தல் கமிஷனில் தி.மு.க., புகார் கொடுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்.,19 முதல் ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.
இதனை மீறும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்தவகையில், மதத்தின் பெயரால் ஓட்டு கேட்டதாக கூறி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க., புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.
அதில், கடந்த 16ம் தேதி நடந்த தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மதத்தை சுட்டிக் காட்டி ஓட்டு சேகரித்தார். அப்போது பேசிய அவர், " இந்து மதத்தை ஒழிப்பேன் எனக் கூறுவதையும் மலேரியா, டெங்கு உடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். இவ்வாறு பேசியதற்கு நாம் சீற்றத்தைக் காட்டியிருக்க வேண்டாமா?
அனைத்து மதங்களையும் ஒழிப்பேன் எனக் கூறுவதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. ஆன்மிகத்துக்கு எதிரான எந்த கட்சியும் ஆளும்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வரக் கூடாது. கோயிலை சுரண்டி தின்னக் கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டுப் போடுகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறக் கூடிய செயல். எனவே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல், கோவையில் பிரதமர் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது குறித்தும் புகார் மனுவில் தி.மு.க.,வில் தெரிவித்திருந்தது
வாசகர் கருத்து