வாஜ்பாய்க்கு நடந்தது, மோடிக்கும் நடக்கும் : கார்கே
''இந்திய மக்கள் மாற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்" என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
டில்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழு நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
இந்திய மக்கள் மாற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2004ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அரசு 'இந்தியா ஒளிர்கிறது' என்ற முழக்கத்தை எழுப்பியது. ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது. வாஜ்பாயும் அந்த தேர்தலில் தோற்றுப்போனார்.
இதே நிலை இன்றைய பா.ஜ.,வுக்கும் நடக்கும். பா.ஜ.,வை தோற்கடிக்க கிராமம் மற்றும் நகரங்களின் ஒவ்வொரு தொழிலாளியும் காங்கிரசுக்கு ஆதரவு தர வேண்டும்.
கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் ஊக்கம் அளித்து களத்தில் செயல்பட்டால்தான் நாம் வெற்றிபெற முடியும். நாட்டில் பொதுமக்கள் தொடர்பான அடிப்படை பிரச்சனைகளிலும் நாம் அதிகளவில் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.
தேர்தலில் நாங்கள் கொடுக்கும் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும், தேர்தல் வாக்குறுதி அளிக்கும் முன் அவற்றை நிறைவேற்றுவதற்கு சாத்தியங்கள் உள்ளனவா என்பதை ஆலோசிக்க வேண்டும்.
இதனால் தான் கடந்த 1926 முதல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி மக்களிடையே நம்பிக்கையானதாக கருதப்படுகிறது. ராகுலின் யாத்திரை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மக்கள் பிரச்னைகளில் கவனத்தை ஈர்த்து மற்றவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து