சீட்டே கொடுக்காவிட்டாலும்... : கூட்டணி கட்சிகளை பாராட்டிய ஸ்டாலின்

"ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது, வருத்தத்தைத் தருகிறது" என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ., அரசை விரட்ட, 2024 லோக்சபா தேர்தல் களமே சரியான வாய்ப்பு என்ற உறுதியுடன் இண்டியா கூட்டணிக்கு தோள் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கிறோம்.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பே கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2021 சட்டசபைதேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல், மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம்.
5வது முறையாகத் தொடரும் இந்த கூட்டணியில், உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயக நடைமுறையை தி.மு.க., தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது, வருத்தத்தைத் தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, கூட்டணிக் கட்சிகளிடம் விளக்கப்பட்டுள்ளது.
வரவுள்ள லோக்சபா தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத கூட்டணிக் கட்சிகளும் உணர்ந்து, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஜனநாயக பண்பைக் காட்டுகிறது.
2024 தேர்தல் களத்தில், நாற்பதும் நமமே.. நாடும் நமதே என்ற வகையில் இண்டியா கூட்டணி வெற்றி பெற அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து