பிராமண சமூக தலைவர்கள் விலகல்: ம.பி.,யில் திக்குமுக்காடும் காங்கிரஸ்
மத்திய பிரதேச காங்கிரசில் இருந்து கணிசமான தலைவர்களும், தொண்டர்களும் பா.ஜ.,வில் இணைவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில், மாவட்ட அளவில் 10,000 தலைவர்களும், தொண்டர்களும் பா.ஜ., பக்கம் வந்ததாக கூறப்படுகிறது. ஊராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களை குறிவைத்தே இந்த இடமாற்றம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 20 எம்.எல்.ஏ.,க்களுடன் காங்.,கில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்த ஜோதிராதித்ய சிந்தியாவில் இருந்து தான் இந்த இடமாற்றங்கள் நிகழத் துவங்கின.
தற்போது, மாநிலத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பல மூத்த காங்., தலைவர்கள் பா.ஜ., பக்கம் வர துவங்கியுள்ளனர்.
காங்., மூத்த தலைவரான சுரேஷ் பச்சோரி, இந்துாரைச் சேர்ந்த சஞ்சய் சுக்லா, ஜபல்பூரைச் சேர்ந்த அருணோதா சவுபே மற்றும் அலோக் சன்சோரியா ஆகியோர் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.
பா.ஜ.,வில் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.,யான நரோத்தம் மிஸ்ராவால் இவர்கள் பா.ஜ., பக்கம் இழுக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச அரசியலை பல காலமாக பிராமணர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தான் தாக்குர்கள் உள்ளனர்.
ரவிஷங்கர் சுக்லா, சங்கர் தயாள் சர்மா, கட்ஜு, ஷியாமா சரண் சுக்லா, மோதிலால் வோரா உள்ளிட்ட தலைவர்கள், ம.பி.,யின் பிராமண முகங்கள்.
மாநிலத்தின் வடக்கு பகுதியில் சிந்தியாக்களும், விந்தியா - பண்டல்காண்ட் பகுதியில் தாக்குர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
காங்கிரசில் கோலோச்சி வந்த, பிராமண சமூகத்தைச் சேர்ந்த பல மூத்த தலைவர்களை அக்கட்சி தற்போது இழந்துவிட்டது. அதிக செல்வாக்கு இல்லாத ஒரு சில தலைவர்கள் மட்டுமே காங்.,கில் தற்போது உள்ளனர். இதை அக்கட்சி நன்றாகவே உணர்ந்துள்ளது.
எனவே தான், ம.பி., லோக்சபா தொகுதி வேட்பாளர்களை அறிவிக்க காங்., திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி, காங்.,கில் இருந்து பெரும் அளவில் பிராமண தலைவர்களின் விலகலுக்கு, ராகுலின் ஹிந்து விரோத கருத்துக்களும் காரணமாக பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து