Advertisement

பா.ஜ.,- பா.ம.க., கூட்டணி: 10 தொகுதிகள் ஒதுக்கீடு

லோக்சபா தேர்தலில் பா.ஜ.,- பா.ம.க., இடையேயான தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது, இதில் பா.ம.க.,வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, கூட்டணிகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் நிறைவு செய்யும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்ட நிலையில், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்து முழு விவரம் வெளியாகவில்லை.

கடந்த சில நாள்களாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் அ.தி.மு.க.,வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பேச்சு நடத்தி வந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இறுதி செய்யப்படலாம் என தகவல் பரவியது.

அதற்கேற்ப, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் இல்லத்தில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசினர். ஆனால், நாங்கள் பழனிசாமியை சந்திக்க செல்லவில்லை என, அந்த எம்.எல்.ஏ.,க்கள் மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பா.ம.க., எம்.எல்.ஏ., சேலம் அருள், பழனிசாமியை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.

கூட்டணி தொடர்பாக முடிவெடுப்பதற்காக பா.ம.க.,வின் உயர்மட்டக் குழு நேற்று கூடியது. லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பா.ம.க., நிர்வாகிகளுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க., மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன், "பா.ஜ.,வுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமான பின்பு தொகுதிகள் நிலவரம் குறித்து அறிவிக்கப்படும். என்றார்.

இந்நிலையில், இன்று(மார்ச்-19) காலை பா.ஜ., பா.ம.க., கட்சிகளிடையே தொகுப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோரை சந்தித்து பேசினர்.முடிவில்,பா.ம.க.,- பா.ஜ.,வுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அன்புமணி கூறியதாவது:

10 ஆண்டு காலமாக பா.ம.கா., தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறது.வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் இணைந்து போட்டியிட இருக்கிறோம். நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி தொடர தமிழகத்தில் மாற்றும் வர இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.தமிழகத்தில் இதுவரை 60 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் ஏதவும் செய்யவில்லைபிரதமர் மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராவார்.

இவ்வாறு அவர் கூறினார்.



பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

ராமதாசின் கனவை பிரதமர் மோடி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் மாற்று அரசியலை கொண்டு வர ராமதாஸ் விரும்புகிறார். எங்களின் இந்த வலுவான கூட்டணிக்கு நிச்சயம் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறோம். நாட்டிற்கு வழிகாட்டும் தலைவராக ராமதாஸ் இருப்பார். இந்த லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடும்.தொகுதிகள் குறித்து விபரம் விரைவில் தெரியப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்