பிரதமர் மோடியின் 'ரோடு ஷோ' : கோவை மக்கள் உற்சாகம்
கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிறைவடைந்தது. வாகனப் பேரணியின்போது இரு பக்கமும் திரண்டிருந்த மக்கள், உற்சாக கோஷத்துடன் மோடியை வரவேற்றனர்.
கோவையில் பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதியை கேட்டு, மாவட்ட பா.ஜ., கடிதம் கொடுத்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை பா.ஜ., தாக்கல் செய்தது. நீதிமன்றமும், பிரதமரின் வாகனப் பேரணிக்கு அனுமதி கொடுத்தது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின் பிரதமர் மோடி, தமிழகம் வருவது முதல்முறை.
பிரதமரின் வருகையை ஒட்டி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவையில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கோவை சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையிலான 2.5 கி.மீட்டர் வாகனப் பேரணி நடந்ததால், போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
கோவையில் மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலனியில் இருந்து ரோடு ஷோ நிகழ்ச்சியை துவக்கினார், பிரதமர் மோடி. அவருக்கு சாலையின் இருபக்கமும் திரண்டிருந்த மக்கள், மோடி... மோடி என முழக்கமிட்டு, பூக்களை தூவினர். பிரதமரின் வாகனத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் இடம்பெற்றிருந்தனர்.
ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையத்தின் அருகே ரோடு ஷோ நிறைவடைந்தது. அங்கு 1998ம் ஆண்டு கோவையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
வாசகர் கருத்து