அன்புமணியை அழ வைத்த ராமதாஸ்: தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது என்ன?
அ.தி.மு.க., - பா.ஜ., என இரு தரப்பிலும் பா.ம.க., மாறி மாறி பேச்சு நடத்தி வந்ததில், சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
பா.ஜ.,வுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என மகன் அன்புமணியும், அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணி என அப்பா ராமதாசும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பும், கூட்டணி பேச்சு இழுத்துக் கொண்டே போனது.
எப்படியும் பா.ம.க.,வை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என முடிவெடுத்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., அருளை தன்னிடம் அழைத்து வரும்படி, சேலம் புறநகர் அ.தி.மு.க., - மா.செ., இளங்கோவனுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார் அருள். அப்போது, பா.ம.க., நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்பதாக பழனிசாமி கூறினார்.
அருள் இந்தத் தகவலை சொன்னதும் அன்புமணி மறுத்து விட்டார். இதையறிந்த ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்திற்கு குடும்பத்தோடு வரும்படி மகனை அழைத்தார்.
அதையடுத்து, நேற்று முன்தினம் மனைவி சவுமியா உடன், தைலாபுரம் சென்ற அன்புமணியுடன் பேசினார் ராமதாஸ். அதன்பின், அ.தி.மு.க., உடன் கூட்டணி என்ற தந்தையின் முடிவை ஏற்றுக் கொண்டார்.
ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்தத் தகவல்கள், டில்லி பா.ஜ., தலைமைக்குத் தெரியவர, அங்கிருந்து முக்கியமான தலைவர் ஒருவர், பா.ம.க., தலைவர் அன்புமணியிடம் வீடியோ காலில் பேசினார். அதையடுத்து தந்தையும், மகனும், முடிவை மாற்றிக் கொண்டு, பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க சம்மதித்துள்ளனர்.
தைலாபுரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, பா.ம.க., தலைவர் ஒருவர் கூறியதாவது:
குடும்பத்தினரை தைலாபுரம் வரவழைத்த ராமதாஸ், எல்லாருடனும் அமர்ந்து பேசினார்.
'நீங்கள் நினைப்பது போல, தமிழகத்தில் பா.ஜ., பெரிய சக்தியாக உருவெடுக்கவில்லை. அப்படி ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கின்றனர். அதேநேரம், அக்கட்சியை பகைப்பதும் நல்லதல்ல. பகைத்தால் எதிர்காலத்தில் சிக்கல்கள் வரும். அது நமக்கு மட்டுமல்ல; பழனிசாமிக்கும் தான். ஆனால், அவர் அதுகுறித்து கவலைப்படாமல் தைரியமாக எதிர்கொள்வதைப் போல் நாமும் எதிர்கொள்வோம்.
'தமிழகத்தைப் பொறுத்த வரை, அ.தி.மு.க., பலமான கட்சி. அவர்களோடு கூட்டணி வைத்துக் கொள்வது தான் சரி. முதுமையில் இருக்கும் எனக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும். இம்முறை எப்படியாவது பா.ம.க., சார்பில் இரண்டு, மூன்று எம்.பி.,க்களாவது டில்லிக்கு செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு எல்லாரும் இசைவு தர வேண்டும்' என உருக்கமாக பேசினார் ராமதாஸ்.
இதைக் கேட்டதும், குடும்பத்தினர் அதிர்ந்து போய், 'நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். கூட்டணி விஷயத்தில் உங்கள் விருப்பம் எதுவோ, அதையே ஏற்றுக் கொள்கிறோம்' என மொத்த குடும்பமும், கண்ணீருடன் ராமதாசுக்கு வாக்குறுதி கொடுத்தனர்.
இப்படி அ.தி.மு.க., உடன் கூட்டணி முடிவு எடுத்த பின்னர் தான், டில்லியில் இருந்து பா.ஜ., முக்கிய தலைவர் ஒருவர் அன்புமணியிடம் பேசியுள்ளார். இதையடுத்து தந்தையும், மகனும் மீண்டும் முடிவை மாற்றிக் கொண்டு, பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க சம்மதித்துள்ளனர்.
இதற்கிடையே, நேற்று மாலை தைலாபுரம் தோட்டத்தில் நடந்த மா.செ.,க்கள் கூட்டத்தில் தந்தையும், மகனும் பேசினர். அப்போது பா.ஜ.,வுடன் கூட்டணி செல்வதே மேல் என்பது போல கோடிட்டு காட்டி பேச, அதை உள்வாங்கிய மா.செ.,க்களும் பா.ஜ., கூட்டணியே மேல் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் தான், நேற்று இரவு பா.ம.க., பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பா.ஜ., உடன் பா.ம.க., கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
வாசகர் கருத்து