சமூக வலைதளத்தில் தேர்தல் பிரசாரம்: கமலுக்கு பாடம் எடுத்த அமைச்சர் ராஜா

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது. அதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் அனைத்து மக்களையும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் சந்தித்து பிரசாரம் மேற்கொள்வது சிரமம்.

எனவே, 'பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், சமூக வலைதள ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவக்கிவிட்டன.

சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக, தி.மு.க., -- ஐ.டி., அணி செயலரும், தொழில் துறை அமைச்சருமான ராஜா, சென்னையில் நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நேற்று இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

குறிப்பாக, 2014, 2019 லோக்சபா தேர்தலை போல், பா.ஜ., இந்த தேர்தலிலும் சமூக ஊடக பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அக்கட்சி, 'மோடியின் குடும்பம், என் முதல் ஓட்டு மோடிக்கு என உறுதி ஏற்போம்' என்பது உள்ளிட்ட பிரசாரத்தை துவக்கியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப அணி இருந்தாலும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,வில் மட்டும் தான் அமைப்பு ரீதியாக இருப்பதோடு, பிரதானமாகவும் உள்ளன.

குறிப்பாக, தி.மு.க.,வில் தகவல் தொழில்நுட்ப அணிக்கு, வட்ட, பகுதி, சட்டசபை தொகுதி, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்.

அவர்கள் வாயிலாக, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து செயல்படுத்தியுள்ள திட்டங்கள், பா.ஜ., தெரிவிக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலடி தெரிவித்து, சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். இந்த பிரசாரத்தை தங்கள் கட்சியின் சமூக வலைதள பக்கத்திலும், தொண்டர்கள் வாயிலாக பதிவிடுமாறும் கமல் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களிடம், ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தவிர, எப்படி பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று, அந்த தலைவர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதற்கு ஏற்ப பிரசாரம் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இணைந்து முறியடிப்போம்

சென்னையில் நேற்று ராஜா அளித்த பேட்டி:

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, சமூக வலைதள பிரசாரத்தை ஒருங்கிணைப்பது தொடர்பாக சந்தித்து வருகிறேன்.

தேர்தல் ஆணையம் உண்மையாக பாடுபடுவதாக சொன்னாலும், தேர்தல் ஆணையம் மீதும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதையும் சேர்ந்து முறியடிப்பதற்கான பணியை தி.மு.க., - ஐ.டி., அணியினரும், தோழமை கட்சி இணையதள போராளிகளும் இணைந்து செயல்படுவர். அவர்கள் எந்த ஆயுதத்தை எடுக்கின்றனரோ, அதை விட சிறப்பான ஆயுதத்தை நாங்களும் எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்