சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்ற தி.மு.க., : பழனிசாமி விமர்சனம்
"லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.509 கோடி ரூபாயை தி.மு.க., வாங்கியுள்ள விவரம் அம்பலமாகியுள்ளது" என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிய அரசியல் கட்சிகள் தொடர்பான புதிய தரவுகளை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில், லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் இருந்து 509 கோடி ரூபாயை தி.மு.க., பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் பியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலமாக தி.மு.க., பெற்றுள்ளது, அம்பலமாகியுள்ளது.
சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் நோக்குடன் எம்.ஜி.ஆரின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும் ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.
தி.மு.க.,வின் இந்த செயலுக்கு லோக்சபா தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து