பிரதமர் பயணத்தை விமர்சித்தால், தி.மு.க.,வுக்கு தான் தோல்வி: அண்ணாமலை

"உழைக்கவே தெரியாத முதல்வர், உழைக்கத் தெரிந்த பிரதமரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தோல்வி தான் மிஞ்சும். தி.மு.க., தோற்றுப் போவதற்கும் இதுவே காரணமாக அமையும்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில், அண்ணாமலை பேசியதாவது:
கோவையில் சாலை வழியாக பிரதமர் மக்களை சந்திக்கப் போகிறார். இது ஒரு சரித்திர நிகழ்வாக மாறப் போகிறது. ஒரு பிரதமர் வீதிக்கே வந்து மக்களை சந்திக்கிறார். இதுவரையில் இப்படி நடந்ததில்லை. மக்களை சந்திக்க அனுமதி கொடுங்கள் என்றால் தடுக்கிறார்கள். நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்றோம்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் வியாபாரம் பரவலாக நடக்கிறது. திருப்பூர் போன்ற நகரங்களில் போதைப் பொருள் விநியோகம் அதிகமாக நடக்கிறது. இதைப் பற்றி பேசினால் முதல்வர் என் மீது அவதூறு வழக்கு போடுகிறார். இதைப் பற்றி பேச வேண்டிய முதல்வர், வழக்கு போடுவதுதான் விந்தை.
பிரதமர் ஏன் தமிழகம் வருகிறார் என தி.மு.க., கேள்வி எழுப்புகிறது. ஜனவரி 2ம் தேதி பிரதமர் தமிழகம் வந்தார். புத்தாண்டை தமிழகத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பதற்காக வந்ததாக கூறினார்.
கடந்த 3 மாதங்களில் நான்கைந்து முறை வந்துவிட்டார். இதெல்லாம் தேர்தலுக்காகவா அவர் வந்தார். முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயின், ஜப்பான் என பயணம் செல்கிறார். அதை விடுத்து, தமிழகம் முழுவதும் நகர்வலம் செல்லலாமே. வெளிநாடு பயணம் இல்லாவிட்டால் அவர் வீட்டுக்குள்ளே இருக்கிறார்.
ஆனால், பிரதமர் மோடி 24 மணிநேரமும் உழைக்கிறார். இதே பிரதமர் தெலங்கானா, மேற்குவங்கம் என பல மாநிலங்களுக்கும் சென்றார். நான்கு நாள்களில் இரண்டு முறை மேற்குவங்கம் சென்றார்.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என தெற்கு மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் பிரதமர் பயணம் மேற்கொண்டார். 19ம் தேதி சேலம் செல்கிறார். தமிழகத்தின் 39 தொகுதிகளின் மக்களும் பிரதமரை பார்க்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
உழைக்கவே தெரியாத முதல்வர், உழைக்கத் தெரிந்த பிரதமரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தோல்வி தான் மிஞ்சும். தி.மு.க., தோற்றுப் போவதற்கும் இதுவே காரணமாக அமையும். தமிழகத்துக்கு பிரதமர் அதிக முறை வந்தால் நல்லது தானே.
பொள்ளாச்சியில் தி.மு.க., கூட்டம் போட்டால் ஸ்கூல் பேருந்துகளை வரவழைத்து கட்டாயப்படுத்துகிறார்கள். தி.மு.க., வெறிபிடித்து சுற்றுகிறது. யானைக்கு மதம்பிடித்தது போல, பணவெறி பதவி வெறி பிடித்து சுற்றுகிறார்கள். 2024 தேர்தல் முடிவுகள் அவர்களின் தோல்வியை வெளிப்படுத்தும்.
தமிழக அரசு, பென்சனுக்கும் சம்பளத்துக்கு போக 3 சதவீத நிதியை தான் கல்விக்காக செலவிடுகிறது. நாங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனக் கூறி மாநிலத்துக்காக தனிக் கல்விக் கொள்கையை உருவாக்குவதாக கூறினார்கள். புதிய கல்விக்கொள்கை, அனைத்து தரப்பு மக்ககளுக்கும் சென்று சேரும்.
புதிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வியின் தரம் உயரும். இதை மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கெல்லாம் தரமான கல்வி வேண்டும். நம் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தரமில்லாமல் படிக்க வேண்டும். இது தான் அவர்களின் எதிர்பார்ப்பு.
2ஜி விவகாரத்தில் 1,75000 கோடி ரூபாய் ஊழல் செய்தார்கள். ராஜா என்ன பேசினாலும் அந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவேண்டும் என சாமானிய மக்களில் ஒருவனாக எதிர்பார்க்கிறேன். தீர்ப்பு வந்த பிறகு அண்ணாமலையை குற்றம் சொல்ல கூடாது.
ராகுல்காந்தியும் கஷ்டப்பட்டு பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். அவர் சென்ற இடத்தில் எல்லாம், மோடி வாழ்க என கோஷம் போட்டார்கள். மோடி டீ மட்டும் தான் விற்றார். ஆனால், இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் நாட்டையே விற்றனர்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
வாசகர் கருத்து