33% இட ஒதுக்கீடு: பின்பற்றுமா தி.மு.க.,?
தி.மு.க., 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், துாத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. தென்சென்னை தொகுதியில், மீண்டும் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இவர்களை தவிர, கட்சியில் நீண்ட நாட்களாக பணியாற்றி, தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என, மகளிர் அணி நிர்வாகிகள் பலர் காத்திருக்கின்றனர்.
மக்களாட்சி நிர்வாக அமைப்பில், பெண்களுக்கு 33 சதவீதம் வழங்க வேண்டும் என கருணாநிதி காலம் முதல் தி.மு.க., வலியுறுத்தி வருகிறது. அதன்படி, தி.மு.க., போட்டியிடும் 21 தொகுதிகளில், 33 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில், 7 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான அறிகுறி தெரியவில்லை.
இதுகுறித்து மகளிர் அணி நிர்வாகிகள் கூறியதாவது:
இந்த தேர்தல் வாயிலாக தி.மு.க., சார்பில், 33 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மகளிருக்கு தொகுதிகள் ஒதுக்கினால், மகளிரின் ஓட்டுகள் காலகாலமாக தி.மு.க.,வுக்கு கிடைக்கும். ஆனால், மகளிருக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பு இல்லை.
கட்சியில் மகளிர் அணியினர் புறக்கணிக்கப்படுகின்றனர். மகளிர் நிர்வாகிகளை அமைச்சர்கள் சிலர் தகாத வார்த்தைகளை பேசி அடிமையாக பார்க்கின்றனர்.
மகளிர் மாநாடு, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தும் போது, அதற்கான செலவுக்கு அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் நிதியுதவி செய்வதில்லை. மகளிர் அணி நிர்வாகிகள் தங்கள் சொந்த பணத்தை தான் செலவு செய்கின்றனர்.
சென்னையில் நடந்த தி.மு.க., மகளிர் அணி உரிமை மாநாட்டில் சோனியா, பிரியங்கா, சுப்ரியா சுலே, மெகபூபா முப்தி போன்ற பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.
அம்மாநாட்டை தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் நடத்தி காட்டினோம். அதனால் இந்த தேர்தலில் போட்டியிட எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம், முக்கியத்துவம் கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். அது கானல் நீராகி விட்டது.
தேர்தல் பணிகளில் மகளிர் அணியினரின் திண்ணை பிரசாரம் முக்கிய பங்கு வகிக்கும். அடுத்தவர்களின் வீட்டின் சமையலறை வரை சென்று தேர்தல் பிரசாரம் செய்ய உரிமை பெற்றுள்ள எங்களுக்கு சொந்தக் கட்சியில் சமஉரிமை, சமூக நீதி, மரியாதை கிடைக்கவில்லை.
வாசகர் கருத்து