ஆனந்தன் அய்யாசாமியை வீழ்த்த பா.ஜ., முக்கிய புள்ளி முயற்சி
தென்காசி லோக்சபா தொகுதியின் பா.ஜ., வேட்பாளரைத் தேர்வு செய்வதில் கடும் போட்டி காணப்படுவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பா.ஜ., 'ஸ்டார்ட் அப்' பிரிவின் மாநிலத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்று அந்த கட்சிக்குள்ளேயே ஒருசிலர் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது.
திருச்சி என்.ஐ.டி.,யில் படித்த மென்பொருள் பொறியாளரான ஆனந்தன் அய்யாசாமி தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுாரைச் சேர்ந்தவர். அமெரிக்காவில், 'இன்டெல்' நிறுவனத்தின் தலைமை பொறியியல் இயக்குனராக பணியாற்றியவர். அமெரிக்க பணியை துறந்து சொந்த ஊர் திரும்பிய அவர், 'வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷனை' துவங்கி சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.,வில் இணைந்த அவர், அக்கட்சிக்காக தென்காசியில் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். குறிப்பாக, தென்காசி தொகுதி முழுதும் எளிய பிரசாரத்தை செய்துள்ளார். 'மீண்டும் மோடி, வேண்டும் மோடி' என்ற வாசகம் தென்காசி தொகுதி முழுதும் சுவர்களில் பளிச்சிடுவதற்கு இவரே காரணம். அவருக்கு பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவன தலைவரின் ஆதரவும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளும் ஆனந்தன் அய்யாசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், பா.ஜ.,வில் உள்ள முக்கியப் புள்ளி ஆனந்தன் அய்யசாமி தங்களுக்குப் போட்டியாக உருவாகிவிடக் கூடாது என்று கருதுவதாக அக்கட்சியிடன் சொல்கின்றனர். அவரது கல்வித் தகுதி, தொகுதி மக்களுடன் இருக்கும் நெருக்கம், இளைஞர்களை ஊக்கப்படுத்தும் திறன் ஆகியவை அவருக்குப் பெரிய பிளஸ் பாயிண்டுகளாக கருதப்படுகின்றன. அவர் தென்காசியில் வெற்றி பெற்றால், டில்லியில் அமையவிருக்கும் ஆட்சியில் முக்கிய அமைச்சர் பதவியை பெறுவார் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், தனக்கு பா.ஜ., டில்லி தலைவர்களோடு இருக்கும் முக்கியத்துவம் குறைந்துபோய்விடலாம் என்ற எண்ணம் அந்த புள்ளிக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் தான், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனைக் கொண்டு வந்து தென்காசியை கேட்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜ., பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, 'ஆனந்தன் அய்யாசாமிக்கு தென்காசி தொகுதி உறுதியானதால் தான், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க., கூட்டணிக்கு சென்று விட்டார். எனவே, யார் என்ன முயற்சித்தாலும் ஆனந்தன் அய்யாசாமிக்கே அதிக வாய்ப்புள்ளது' என்றார்.
வாசகர் கருத்து