தேர்தல் பத்திர எண்கள் எங்கே : உச்ச நீதிமன்றம் கேள்வி
"ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும் தனித்தனி எண்கள் இருக்கும்போது, அதனை ஏன் வெளியிடவில்லை" என, பாரத் ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
'தேர்தல் பத்திர நடைமுறை சட்டவிரோதம்' என கடந்த பிப்., 15ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை 3 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
"ஆனால், மூன்று வார காலத்துக்குள் வெளியிடுவது கடினம். ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன" எனக் கூறி நான்கு மாதகால அவகாசத்தை பாரத் ஸ்டேட் வங்கி கோரியது. இந்த மனுவை கடந்த 11ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை (12ம் தேதி) மாலை வணிகநேரம் முடிவதற்குள் எஸ்.பி.ஐ., ஆவணங்களை வெளியிட வேண்டும். இந்த தரவுகளை தேர்தல் கமிஷனுக்கு வழங்கி, 15ம் தேதிக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டு, காலஅவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., வழங்கியது. இந்த விவரங்கள் அனைத்தும் நேற்று இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் எனக் கூறி தேர்தல் கமிஷன் மனுத்தாக்கல் செய்தது. இதனை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பாரத் ஸ்டேட் வங்கிக்கு சில கேள்விகளை எழுப்பியது.
வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், " எங்கள் உத்தரவு மிக தெளிவாக உள்ளது. தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார், அவர்கள் பெயர், எந்த தேதியில் வாங்கினார்கள், எந்த அரசியல் கட்சி அந்த பத்திரங்களை பணமாக மாற்றியது என்ற விவரங்களை வெளியிடுமாறு கூறினோம். இதில், குறிப்பிட்ட விவரங்களை மட்டும் வழங்கிவிட்டு, தேர்தல் பத்திர பாண்ட் எண்களை வெளியிடாதது ஏன்?
அந்த எண்கள் தான், நன்கொடையாளரையும் அதை வாங்குபவரையும் இணைக்கக் கூடிய ஒன்று. அதையும் கொடுத்தால் தான் விவரங்கள் முழுமை பெறும். அந்த பிரத்யேக எண்களை எஸ்.பி.ஐ., ஏன் குறிப்பிடவில்லை. இதற்கு விளக்கம் அளிக்க எஸ்.பி.ஐ., வங்கி தரப்பில் இங்கு வழக்கறிஞர் இருந்திருக்க வேண்டும். இந்த விவரங்களை எஸ்.பி.ஐ., ஏன் வெளியிடவில்லை என்பதை திங்கள்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து