Advertisement

தமிழ் பண்பாட்டின் எதிரி, தி.மு.க : பிரதமர் மோடி

" தி.மு.க., தமிழகத்தின் பண்பாட்டுக்கு எதிரி. நம் கடந்தகால பாரம்பரியத்தையும் பெருமைகளையும் கண்மூடித்தனமாக எதிர்க்கிறது" என, கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்தில் எவ்விதமான வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாது. அவர்கள் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஊழல் மட்டும் தான் உள்ளது.

பா.ஜ.,வின் மக்கள் நலத்திட்டங்களால் மக்கள் பலன் பெற்றுள்ளனர். மக்களுக்கு ஆப்டிகல் பைபர் 5ஜியை பா.ஜ., அரசு கொடுத்துள்ளது. ஆனால், 2ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது தி.மு.க., தான். கேலோ இந்தியா வாயிலாக விளையாட்டுத்துறையில் மிகவும் முக்கியமான உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்.

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி, கொள்ளையை கொள்கையாக வைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஹெலிகாப்டர் வாங்குவதிலும் ஊழல் செய்தார்கள்.

பா.ஜ.,வுக்கு கன்னியாகுமரி எப்போதுமே ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் மக்களை எப்படி சுரண்டலாம் என இண்டியா கூட்டணி காத்துக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் நான்கு வழி சாலையை துவங்க காங்கிரஸ் அரசு எந்த நிதியும் கொடுக்கவில்லை.

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட ரெட்டை பாலமும் எங்கள் ஆட்சியில் தான் மிக விரைவாக செயல்பட துவங்கியிருக்கிறது. தமிழகத்தின் உள்துறைமுக கட்டமைப்பை மேம்படுத்துவதில் பா.ஜ., அரசு சிறப்பாக செயல்படுகிறது.

மீனவர் நலனுக்காக பா.ஜ., தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நவீன மீன்பிடி படகுகளுக்கு நிதி உதவி வழங்குவது, கிசான் கடன் அட்டை என எதுவாக இருந்தாலும் மக்களின் கவலை தீர்ப்பதற்கான முயற்சியில் பா.ஜ., அரசு ஈடுபட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு நெடுஞ்சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

2009-14 காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தின் ரயில்வே பணிகளுக்காக அவர்கள் கொடுத்தது ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் அளவு கூட இல்லை. ஆனால், பா.ஜ., அரசு ரயில்வே கட்டமைப்புக்காக ஆண்டிற்கு 6300 கோடி ரூபாயை கொடுத்தது. .தி.மு.க., தமிழகத்தின் பண்பாட்டுக்கு எதிரி. நம் கடந்தகால பாரம்பரியத்தையும் பெருமைகளையும் கண்மூடித்தனமாக எதிர்க்கிறது. அயோத்தி ராமர் கோயில் செல்வதற்கு முன்பு நான் தமிழகம் வந்து சென்றேன். ஆனால், அயோத்தி கோயிலில் நடந்த பிரதிஷ்டையை பார்க்க கூட தி.மு.க.,வுக்கு விருப்பமில்லை. இங்கே அயோத்தி கோயில் விழாவை பார்க்க கூட அவர்கள் தடை செய்தார்கள். உச்ச நீதிமன்றமே அவர்களை கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழகத்தின் பாரம்பரியத்தின் பெருமிதத்தை பாதுகாக்க பா.ஜ., என்றும் முன்நிற்கிறது. தி.மு.க.,வும் காங்கிரசும் ஜல்லிக்கட்டை தடை செய்தது. ஆனால், ஜல்லிக்கட்டை முழு உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடு செய்தது, பா.ஜ., அரசு தான்.

ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி.. தமிழகத்தின் எந்த பாரம்பரியமாக இருந்தாலும் சரி. அதை யாரும் அசைக்க முடியாது. இது மோடியின் உத்திரவாதம்.

புதிய பார்லிமென்ட் கட்டி, அங்கே ஒரு செங்கோல் நிறுவப்பட்டது. அதைக் கூட தி.மு.க.,வினர் புறக்கணித்துவிட்டனர். இதுபோன்ற தமிழர் பெருமை யாரும் புறக்கணிக்க முடியாது. இது மோடியின் உத்தரவாதம்.

கன்னியாகுமாரியில் இப்படி ஒரு ஆதரவு அலையை பார்த்து டில்லியில் எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் கெட்டுப் போய்விட்டது. உங்களுடைய அன்பும் பாசமும் மொத்த இந்தியாவுக்கும் பலம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதை எனக்கு மட்டுமானதாக நான் பார்க்கவில்லை.

இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள், தமிழ் மக்களின் உயிரோடு விளையாடும் செயலை செய்து கொண்டிருக்கின்றனர். நம் மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்பட்டது அவர்கள் உயிருடன் திரும்ப முடியாது என்றார்கள். ஆனால், நான் அமைதியாக இருக்கவில்லை.

எத்தனை வழிகள் இருக்கிறதோ அத்துனை கதவுகளை திறந்தோம். எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளதோ, அனைத்தையும் சரி செய்து மீனவர்களையும் மீட்டு வந்தோம்.

இன்று கன்னியாகுமரியில் மிகப்பெரிய விஷயத்தை சொல்ல நினைக்கிறேன். நம் மீனவர்கள் ஏன் இலங்கைக்கு போக வேண்டும். யார் செய்த தவறுக்காக மீனவ மக்கள் தொடர்ந்து தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் மீனவர்கள் இனியும் இதுபோன்ற துன்பத்தை தொடர்ந்து அனுமதிக்க நம் அரசு அனுமதிக்காது.

இது நீங்கள் யாரும் செய்த குற்றம் இல்லை. தி.மு.க.,வும் காங்கிரசும் சேர்ந்து செய்த குற்றம். மக்கள் கண்களில் புழுதியை தூவி விட்டு, அவர்களின் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். இனியும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். காங்கிரசும் தி.மு.க.,வும் அவர்களுக்கு செய்த பாவத்திற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.

மத்தியில் ஆளும் நம் அரசு, பெண்களை முன்னேற்றுவதற்கான அரசு. ஆனால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியால் பெண்களை ஏமாற்ற மட்டுமே தெரியும். பெண்களை அவமானப்படுத்த மட்டுமே தெரியும். பா.ஜ., தான் பெண்களை மதிக்கின்ற கட்சி. இந்த மேடையிலும் எத்தனை பெண்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்துக்காக பா.ஜ., அரசு தொடர்ந்து பாடுபடும்.

என்னால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய குறையாக இருக்கிறது. இந்த குறைபாட்டை போக்குவதற்காக தொழில்நுட்பத்தின் உதவியை நான் நாடி இருக்கிறேன்.

இனிமேல் உங்களிடம் தமிழில் பேச போகிறேன். நமோ செயலியில் தமிழில் பேச இருக்கிறேன். நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்கலாம். இதன் வாயிலாக நாம் சொல்ல நினைக்கக்கூடிய செய்தியை தமிழ் மொழியில் சொல்ல முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு மோடி பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்