தேர்தல் பத்திர ரகசியம் : நன்கொடை பெற்ற கட்சிகள் எவை?
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ., வழங்கிய முழு விவரங்களையும் தேர்தல் கமிஷன் நேற்று இரவு இணையத்தில் வெளியிட்டது.
'தேர்தல் பத்திரங்கள் என்ற நடைமுறை சட்டவிரோதம்' என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வகையில், தேர்தல் பத்திரங்களின் விற்பனை, அவற்றை வாங்கிய நபர்கள், எத்தனை பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டன உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யுமாறு பாரத் ஸ்டேட் வங்கிக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எஸ்.பி.ஐ., அளிக்கும் தகவல்களை, தேர்தல் கமிஷன் தன்னுடைய இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, அனைத்து தரவுகளையும் தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., வழங்கியது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ., தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், '2019 ஏப்., 1ம் தேதியில் இருந்து, இந்த தேர்தல் பத்திரம் நடைமுறையில் இருந்த, கடந்த பிப்., 15ம் தேதி வரை மொத்தம், 22,217 பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 'இதில், 22,030 பத்திரங்கள், அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல்கள் அனைத்தையும் இன்று மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிட்டது.
இரண்டு தொகுப்புகளாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 337 பக்கங்கள் உள்ள முதல் தொகுப்பில், பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம், 426 பக்கங்கள் உள்ள இரண்டாவது தொகுப்பில், எந்தெந்த கட்சிகள், அந்தப் பத்திரங்களை பணமாக்கியுள்ளன என்ற விபரம், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. தேதி வாரியாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நிறுவனம் மொத்தம் எவ்வளவு வழங்கியுள்ளது, அது எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது போன்ற விபரங்கள் இல்லை. அதுபோல, அரசியல் கட்சிகள் மொத்தமாக பெற்றுள்ள நன்கொடை தொடர்பான விபரமும் தொகுக்கப்படவில்லை.
நிறுவனங்களின் பட்டியல்
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை வழங்கிய நாட்டின் முன்னணி நிறுவனங்கள்: பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் - 1,368 கோடி ரூபாய், மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் -- 966 கோடி ரூபாய், குயிக் சப்ளை செயின் நிறுவனம் 410 கோடி ரூபாய், வேதாந்தா நிறுவனம் - 400 கோடி ரூபாய், ஹால்தியா எனர்ஜி -377 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. பார்த்தி குழுமம் - 247 கோடி ரூபாய், எஸ்ஸல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்- 224 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. பியூச்சர் கேமிங் நிறுவனம் லாட்டரி மார்ட்டினுடையது என கூறப்படுகிறது.
பா.ஜ., காங்கிரஸ், அ.தி.மு.க.,--தி.மு.க., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணமுல் காங்., - பி.ஆர்.எஸ்., சிவசேனா, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த பட்டியலில் உள்ளன.
இதற்கிடையே, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில், 2024 ஜனவரி வரை, மொத்தம், 16,518 கோடி ரூபாய் மதிப்புள்ள, 28,030 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், பா.ஜ., 6,566 கோடி ரூபாயும், காங்கிரஸ் 1,123 கோடி ரூபாயும், திரிணமுல் காங்கிரஸ் 1,092 கோடி ரூபாயும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற்றுள்ளதாக ஏ.டி.ஆர்., அமைப்பு தெரிவித்துள்ளது.
நன்கொடை பெற்ற கட்சிகள்
பா.ஜ., காங்கிரஸ், அ.தி.மு.க., - தி.மு.க., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணமுல் காங்., - பி.ஆர்.எஸ்., சிவசேனா, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த பட்டியலில் உள்ளன.
இதற்கிடையே, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில், 2018 மார்ச்சிலிருந்து, 2024 ஜனவரி வரை, மொத்தம், 16,518 கோடி ரூபாய் மதிப்புள்ள, 28,030 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் பா.ஜ., 6,566 கோடி ரூபாயும், காங்கிரஸ் 1,123 கோடி ரூபாயும், திரிணமுல் காங்கிரஸ் 1,092 கோடி ரூபாயும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற்றுள்ளதாக, ஏ.டி.ஆர்., அமைப்பு தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து