Advertisement

கன்னட போர்வையில் ஆந்திர கட்சியால் பங்கம்: தவறான நபர்களை திட்டுகிறாரா சீமான்?

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோன விவகாரம், இப்போது வேறு ரூட்டில் செல்லத் துவங்கியிருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த சிலர்தான், திட்டமிட்டு சின்னத்தைப் பறித்துள்ளதாக அக்கட்சி யினர் புலம்பி வருகின்றனர்.

பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை தனக்கு ஒதுக்கக் கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் தமிழகத் தலைவர் யோகி ஜெயகுமார்,செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அதில், தமிழகம் உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும், கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என்றால் தங்களுடன் சீமான் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

பேட்டி அளிக்க நேற்று காலை அவர் பத்திரிகையாளர் மன்றத்திற்கு வந்தபோது, 'கலைஞர் அறிவகம்' என, தி.மு.க.,வின் கருப்பு, சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட காரில் முனி ஆறுமுகம் என்பவர் உடன் வந்தார்.

அந்த காரில் கரும்பு விவசாயி சின்னத்துடன் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி மற்றும் திராவிட தெலுகு தேசம் கட்சி என்ற இரண்டு கட்சிகளின் பெயர்களும் கூட்டணி என்ற வார்த்தையும் பொறிக்கப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள், காரின் முன்பகுதியிலும் பக்கவாட்டுகளிலும் ஒட்டப்பட்டிருந்தன.

பழி தீர்ப்பு



இது குறித்து நாம் தமிழர் கூறியதாவது:

ஜெயக்குமார் நாயுடு என்பவர் தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமைச் சங்கத்தின் நிறுவனர். பாரதிய ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவரான வீரா ரெட்டியும் ஆந்திராவைச் சேர்ந்தவர். ஆனால், கட்சியின் இணையதளத்தில், தலைமை அலுவலகத்திற்கு டில்லி முகவரியையும், கிளை அலுவலகத்திற்கு கர்நாடக மாநில முகவரி யையும் கொடுத்துள்ளனர்.

மேலும் ஜெயகுமார் நாயுடுவை மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக தலைவராக அறிவித்தனர். ஆனால், மூன்று நாட்ளுக்கு முன்புதான் அவர், தான் நியமிக்கப்பட்ட படத்தையே தனது முகநுால் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம் பறிக்கப்பட்டதன் பின்னணியில், ஆந்திராவைச் சேர்ந்த சிலரும் தமிழகத்தின் ஆளுங்கட்சியினரும் உள்ளனர். திட்டமிட்டு சீமானை பழிதீர்த்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம் கிடைத்தபின், எங்கள் ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த விவகாரம் குறித்து, யோகி ஜெயகுமார் அளித்த பேட்டி:

தருமபுரியை சேர்ந்த முனி ஆறுமுகம் தி.மு.க.,வில் இருந்தவர். தற்போது திராவிட தெலுகுதேசம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து, அதுகுறித்து என்னுடன் பேச வந்தார். ஆர்வக்கோளாறு காரணமாக எங்கள் கட்சி ஸ்டிக்கரை, அவரது காரில் ஒட்டியுள்ளார். அவருக்கும்,எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட நான்கு தொகுதிகளை அவர் கேட்டார். பேச்சு நடந்து வருகிறது. வேறு சில கட்சிகளும் எங்களுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. கூட்டணி முடிவானதும் அதுபற்றி அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவசர சீமான்



இதுகுறித்து பா.ஜ.,வினர் கூறியதாவது:

பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் தலைவர் வீரா ரெட்டி என்பதும், அக்கட்சியுடன் தமிழகத்தில் தெலுங்கு நல அமைப்புகள் தொடர்பில் இருப்பதும், தி.மு.க.,வில் இருந்தவர்கள் அவர்களுடன் கூட்டணி பேசுவதும் தெரியவந்துள்ளது.

இந்தப் பின்னணியை அறியாமலேயே சீமான், தன் கட்சி சின்னம் பறிக்கப்பட்டதற்கு காரணம் பா.ஜ.,வும், அண்ணாமலையும் தான் என்று வீராவேசமாக பேட்டிகளில் பேசி வந்தார். இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் அவசரத்தோடும், அரைகுறையாகவும் சீமான் செயல்படுகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)