பா.ஜ.,வால் கூடுதலாக கிடைக்கும் ஒரு எம்.பி.,
- நமது சிறப்பு நிருபர் -
சத்தீஸ்கரில் 11 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தற்போது, 12வது எம்.பி., கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் அரச குடும்பத்து மருமகள் ராணி கீர்த்தி சிங், திரிபுராவில் போட்டியிடுகிறார்.
சத்தீஸ்கரில், 11 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதுவரை நான்கு முறை லோக்சபா தேர்தல்கள் அங்கு நடந்துள்ளன. அதில், 2004, 2009, 2014 தேர்தல்களில், 10ல் பா.ஜ., வென்றது. கடந்த முறை காங்கிரஸ் இரண்டில் வென்றது. வரும் தேர்தலில், 11 தொகுதிகளையும் கைப்பற்றும் தீவிரத்தில் பா.ஜ., உள்ளது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 12வதுஎம்.பி.,யும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆனால், திரிபுராவில் இருந்து அந்த எம்.பி., கிடைக்க உள்ளார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் புகழ்பெற்ற மாணிக்யா அரச குடும்பத்தின் அரசராக இருந்த கீர்த்தி பிக்ரம் கிஷோர் மாணிக்யாவின் மகள் தான் கீர்த்தி சிங். இவரது சகோதரர் பிரத்யுத் பிக்ரம் மாணிக்ய தேப் பர்மா, திரிபுராவைச் சேர்ந்த திப்ரா மோத்தா கட்சியின் நிறுவன தலைவர்.
பழங்குடியினர் நலனுக்காக போராடி வரும் இந்த கட்சி, சமீபத்தில் அரசுடன் ஒப்பந்தம் செய்தது. இதைத் தொடர்ந்து, ஆளும் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தது.
இதைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட, ராணி கீர்த்தி சிங்குக்கு பா.ஜ., வாய்ப்பு அளித்துள்ளது. அவர், திரிபுராவில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றான, மேற்கு தொகுதியில் பா.ஜ., வேட்பாளராகபோட்டியிட உள்ளார்.
இவரது கணவர் யோகேஷ்வர் ராஜ் சிங், கவார்த்தா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த அரச குடும்பம், சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்தது. சத்தீஸ்கரின் மருமகளான ராணி கீர்த்தி சிங் வெற்றி பெறுவது உறுதியாகிஉள்ளது. இதன் வாயிலாக, சத்தீஸ்கருக்கு 12வது எம்.பி., கிடைக்கஉள்ளார்.
வாசகர் கருத்து