மகன்களுக்காக போராடும் அப்பாக்கள்: தி.மு.க.,விற்கு தொல்லையான நெல்லை
லோக்சபா தேர்தல் வேட்பாளர் தேர்வில் தற்போது நெல்லையே தி.மு.க.,விற்குதொல்லையாகி விட்டது.
சிறப்பாக செயல்படாத தி.மு.க., - எம்.பி.,க்கள் பட்டியலில் திருநெல்வேலி டாப்பில் உள்ளது. அதேபோல் தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளிலேயே அதிக எண்ணிக்கையில் விருப்ப மனு கொடுக்கப்பட்ட தொகுதி திருநெல்வேலி தான்.
இந்த ஊர் எம்.பி., ஞானதிரவியம் கல்குவாரிகள் விஷயத்தில் கலெக்டர் விஷ்ணுவுடன் மோதலில் ஈடுபட்டு, பெயரைக் கெடுத்துக் கொண்டார். இந்த முறை அவர் தனக்கு பதிலாக மகன் சேவியர் ராஜாவிற்கு சீட்டு கேட்டுள்ளார்.
பகீரத முயற்சி
சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ். சமீபத்தில் தி.மு.க.,வில் மாணவரணி பொறுப்பை பெற்றார். எப்படியாவது மகன் அலெக்சுக்குஎம்.பி., சீட் வாங்கி விட வேண்டும் என பகீரத முயற்சிகள் மேற்கொள்கிறார் அப்பாவு.
ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி, போன்ற தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, அனைத்து திட்டங் களையும் தன் ராதாபுரம் தொகுதிக்கு கொண்டு செல்வதாக சபாநாயகர் அப்பாவு மீது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது அப்பாவு வீட்டிலேயே இன்னொரு எம்.பி., வந்து விட்டால் மாவட்ட மக்களை புறக்கணித்து அனைத்தையும் ராதாபுரத்திற்கே கொண்டு செல்வார் என்கின்றனர் கட்சியினர்.
தி.மு.க., மாவட்ட செயலர் ஆவுடையப்பன் தன் மகன் பிரபாகரனுக்கு சீட்டு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் எதிர்ப்பு
மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தவர், கடந்த முறை எம்.பி., சீட்டுக்கு பணம் முதலீடு செய்தவர் கிரகாம்பெல். இந்த முறை பட்டியலில் அவர் பெயரும் உள்ளது. அவர் மீதும் கல்குவாரி குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஏற்கனவே பொறுப்பில் இருப்பவர்களின் மகன்களுக்கு எம்.பி.,சீட் தரக் கூடாது என்ற எதிர்ப்பு நிலவுவதால், யாருக்கு சீட்டு தருவது என தி.மு.க., தலைமை குழம்பிப் போய் உள்ளது.
வாசகர் கருத்து