மீண்டும் அமைச்சர் ஆகிறாரா பொன்முடி?
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, திருக்கோவிலூர் எம்.எல்.ஏ.,வாக பொன்முடி தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மீண்டும் அமைச்சராக பதவியேற்பு நடத்த வேண்டும்' என, கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
தி.மு.க.,வின் 2006-11 ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவால் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார், பொன்முடி. அவர் போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக, சட்டசபை செயலகம் அறிவித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடியும் அவரது மனைவியும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவால், 'மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏ., ஆவார்' என்ற தகவல் வெளியானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த பின்னர், அதனை விரிவாக ஆராய்ந்த சட்டசபை செயலகம், 'திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக பொன்முடி தொடர்வார்' என அறிவித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலுடன் தனது பரிந்துரை கடிதத்தை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார். 'இன்று அல்லது நாளை பொன்முடிக்கு அமைச்சராக பதவியேற்பு நிகழ்வை நடத்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து