Advertisement

கோவையில் தி.மு.க., போட்டி : அண்ணாமலையை எதிர்கொள்ள வியூகம்

கோவை தொகுதியை, கூட்டணி கட்சியான மா.கம்யூ.,விடம் இருந்து தி.மு.க., பறித்ததற்கு, அண்ணாமலை போட்டியிடப் போவது தான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடிக்கடி போட்டியிட்டு வென்ற இடம் என்பதால், இந்த முறையும் தொகுதியை தக்க வைக்க மா.கம்யூ., பேச்சு நடத்தி வந்தது. இடையே, கமலும் கோவையை கேட்டார். உதயநிதி அதற்காகப் பரிந்துரைத்தார். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கமல் மறுத்து, தேர்தலில் இருந்தே ஒதுங்கி விட்டார். மேலும், சிட்டிங் எம்.பி., நடராஜன் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதை, உளவுத்துறை மூலமும் அறிந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

அண்ணாமலை போட்டி



தொடர்ந்து கோவை தொகுதி கட்சியினருடன் நேர்காணல் நடத்தியபோது, கட்சியினர் கூறிய கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்தார். அப்போது, 'பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அல்லது தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரில் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

'இம்முறையும் கூட்டணி கட்சிக்கு தொகுதியை தாரைவார்த்தால், தி.மு.க.,வை கோவையில் வளர்க்க முடியாது; கட்சி காணாமல் போய் விடும். பா.ஜ.,வை வீழ்த்த, தி.மு.க., நேரடியாக போட்டியிட வேண்டும்' என, வலியுறுத்தினர். இதையேற்றுக் கொண்ட ஸ்டாலின், 'கூட்டணி கட்சியினரிடம் பேசுகிறேன்' என உறுதியளித்தார்.

தொகுதிப் பங்கீடு குறித்து பேச வந்த மா.கம்யூ., நிர்வாகிகளிடம், 'இம்முறை கோவையில் நாங்களே (தி.மு.க.,) போட்டியிடப் போகிறோம்; பா.ஜ.,வை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடிவு செய்திருக்கிறோம். வேறு தொகுதியை பெற்றுக் கொள்ளுங்கள். அங்கே உங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைப்பது எங்களது வேலை' என கூறியிருக்கிறார். இதற்கு சம்மதம் தெரிவித்து தான், கோவைக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை மா.கம்யூ., பெற்றிருக்கிறது என்கின்றன தி.மு.க., வட்டாரங்கள்.

உள்குத்து வேலைகள்



இதற்கிடையே, தி.மு.க.,வில் உள்குத்து வேலைகளில் கோவை பகுதியினர் மிகப் பிரபலம் எனக் கூறப்படுகிறது. கோவை தி.மு.க.,வினர் மிகவும் வித்தியாசமானவர்கள். அடுத்த கட்சிக்காரர்களை சீண்டவே மாட்டார்கள். தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை பற்றியே வண்டி வண்டியாய் தகவல்களை சேகரித்து, ஊடகங்களுக்கு கொடுப்பர்; தேர்தலில் வெற்றி வாய்ப்பை கெடுப்பர்.

அதனால் தான், ஜெ., இருந்தபோது, 2016 சட்டசபை தேர்தலில் கூட, கோவை மாவட்டத்தில் இருக்கும், 10ல் ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற தி.மு.க., அவர் மறைந்தபின் நடந்த 2021 தேர்தலில், 10 தொகுதிகளிலும் மொத்தமாய் தோற்றது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்ததற்கு காரணம், அப்போதிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவர் வீடு வீடாகக் கொடுத்த கொலுசும், ஹாட் பாக்சும் தான்.

இன்றைய நிலையில் தொகுதியில் கட்சியை வழி நடத்த ஆளில்லை என்ற நிலையில், கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கோகுல் மற்றும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகிய இருவருக்கே, கோவையில் வேட்பாளராகும் வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கஷ்டப்பட்டு மா.கம்யூ., கட்சியிடமிருந்து கோவை தொகுதியை வாங்கியிருக்கும் தி.மு.க., அங்கு வெல்லுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்