'வெற்றி வேல்... வீர வேல் என்பது போர் முழக்கம்!'; கனிமொழி எம்.பி., சிறப்பு பேட்டி

கருணாநிதியின் மகள் என்ற பின்புலத்தையும் தாண்டி, 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி வாயிலாக, நலிந்து போயிருந்த, நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதில் முன்னோடியாக விளங்கியவர்; கவிஞர்; எழுத்தாளர்; தி.மு.க., மகளிரணி செயலர், துாத்துக்குடி எம்.பி., என, பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர், கனிமொழி. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றிக்காக, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, தீவிர பிரசாரம் செய்து வரும் கனிமொழி, நம் நாளிதழின், 'தேர்தல் களம்' பக்கத்திற்காக அளித்த சிறப்பு பேட்டி:

இந்த தேர்தலில், உங்களுடைய ஆதரவாளர்களுக்கு, தி.மு.க.,வில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லையா?எங்கள் கூட்டணியின் எல்லா வேட்பாளர்களும், நான் ஆதரிக்கக் கூடிய வேட்பாளர்களே. தி.மு.க., யாரை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறதோ, அவர்களுக்கு என் முழு ஒத்துழைப்பு உண்டு. எல்லாரும் கட்சியின் வேட்பாளர்கள். இதில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.

தென் மண்டல பொறுப்பாளராக, ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை செயல்பட சொல்லியிருந்த, தி.மு.க., தலைமை, இப்போது உங்களை, அந்த பொறுப்பில் நியமித்து இருப்பதன் பின்னணி என்ன?தேர்தலுக்கு முன்னர் இருந்த பணிகளுக்காக, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்போது, தேர்தல் நேரத்தில் இருக்கக் கூடிய பணிகளுக்காக, எம்.பி.,க்களை நியமித்திருக்கின்றனர். எ.வ.வேலு, தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர். அவரால், இந்த பணிகளை செய்வது இயலாத காரியம். தற்போது, பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் எல்லாருமே, எம்.பி.,க்கள் தான்.

சென்னை, சேப்பாக்கம் - -திருவல்லிக்கேணி தொகுதியில், உதயநிதி போட்டியிடுகிறாரே?ஆம். போட்டியிடுகிறார்; வெற்றி பெறுவார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி, உங்களை சந்தித்து வாழ்த்து பெற்றாரா?வீட்டிற்கு வந்து, என் தாயாரிடமும், என்னிடமும் வாழ்த்து பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போதும், என் தாயாரை சந்தித்தார்.

தி.மு.க., தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள். தென் மாவட்டத்தில் இருக்கும் அனைத்துத் தொகுதிகளையும் வென்று கொடுப்பீர்களா?எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் ஆசை. முடிந்தவரை, என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து, மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் இணைந்து, பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற பாடுபடுவோம்.

பிற இனத்து பெண்களை, ஆதிதிராவிடர் திருமணம் செய்தால், 60 ஆயிரம் ரூபாயும், தங்க காசும் வழங்கப்படும் என்ற, தேர்தல் அறிக்கையின் தகவல் சர்ச்சையாகி இருக்கிறதே?யாரும், யாரையும், நீங்கள் இப்படித் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. இத்தகைய திட்டத்தை, மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. இது, பெண்கள், ஆண்கள் இரு பாலருக்குமான திட்டம். 1967 முதல் ஜாதி மறுப்பு திருமண நிதி உதவி திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் செயல்படுத்தப்பட்டது.


கடந்த, 10 ஆண்டுகளில், தமிழக அரசால், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக, 2015- - 16ல், 21.21 கோடி; 2016- - 17ல், 13.08 கோடி; 2017- -18ல், 19.03 கோடி, 2018- - 19ல், 16.51 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்க, 2.5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும், டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்பு திருமண நிதி உதவித் திட்டத்தை, மத்திய அரசு, 2013ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

கொரோனாவை காரணம் காட்டி, தமிழகத்தில், தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனரே; வாய்ப்பிருக்கிறதா?இவ்வளவு நெருக்கத்தில் தேர்தலை தள்ளி வைப்பது, நியாயம் இல்லாத ஒன்று. நிச்சயம் அப்படி செய்ய மாட்டார்கள் என, நம்புகிறேன். செய்தால், மக்கள் நிச்சயமாக ஏற்க மாட்டார்கள். அ.தி.மு.க.,வின் தோல்வி பயத்திற்காக, இதையெல்லாம் செய்ய முடியாது. தேர்தல் களத்தில், அ.தி.மு.க., தரப்பில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கிறது.

'தி.மு.க., தரப்பில் பணத்தை எடுக்கவே மாட்டேங்கிறாங்க' என்ற புலம்பல், கட்சியினரிடம் இருக்கிறதே?தேர்தல் களத்தில் வெற்றியை பணம் மட்டுமே தீர்மானிப்பதில்லை. மக்கள் என்ன உணர்வில் இருக்கின்றனர் என்பதே, வெற்றியை உறுதி செய்யும்.இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும் என்பதில், மக்கள் உறுதியாக இருக்கின்றனர். ஸ்டாலின், முதல்வராக வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் பண பலத்தை நம்பலாம்; நாங்கள் மக்கள் பலத்தை நம்புகிறோம்.

தி.மு.க.,வின் வெற்றிக்காக, வியூகம் வகுத்துக் கொடுத்த நிறுவனம், ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு கிளம்பி விட்டதாகச் சொல்கின்றனரே?அவர்கள் எங்களோடு இணைந்து, இன்னும் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர். ஒப்பந்தத்தை முறித்து செல்ல வேண்டிய அவசியமில்லை. தேர்தல் வரை பணியாற்றுவர். நான் செல்லும் இடங்களில், அவர்கள் பணியாற்றுவதை பார்க்க முடிகிறது.

தி.மு.க.,வில், பெரும்பகுதி ஆண் வேட்பாளர்களே இடம் பெற்றுள்ளனர். பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்காதது குறித்து?பெண்களுக்கு என, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பல தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண்களுக்கான, 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் தான், அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல்கள் போல் உந்துசக்தி, இந்த சட்ட மாற்றத்தில் தான் இருக்கிறது.

தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், இலவச அறிவிப்புகள் அதிகம் உள்ளன. ஏற்கனவே, கடன் சுமையில் தள்ளாடும் அரசின் நிதி நிலையை, இந்த இலவசங்கள் எல்லாம் மேற்கொண்டும் தள்ளாட வைக்காதா?நிதி நிலையை சரியாக கையாளத் தெரியாத, ஒரு திறமையற்ற ஆட்சியாக, அ.தி.மு.க., அரசு இருக்கிறது. அதனால் தான், இவ்வளவு பிரச்னைகள். இன்று நாடு முழுதும் உள்ள மக்கள், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். உலகம் முழுதும், பல நாடுகள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்போது தான் பொருளாதாரம் மீட்சியடையும். 'மக்கள் கைகளில் பணம் சென்று சேர வேண்டும்' என, ப.சிதம்பரம் கூட, பலமுறை சொல்லியிருக்கிறார். இவை இலவசத் திட்டங்கள் இல்லை; தொலைநோக்குத் திட்டங்கள்.

'தி.மு.க., ஆட்சிக்கு வராமல் தடுப்பது தான், எங்கள் ஒரே நோக்கம்' என, பா.ஜ., கூறுகிறதே?ஆமாம். ஏனென்றால், அவர்களுடைய கொள்கைகளுக்கு எதிராக, இந்த நாட்டை, ஜாதி, மதத்தின் பெயரால் பிரித்தாள நினைப்போருக்கு மாறாக, எல்லாரையும் ஒன்றுபடுத்தி, அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்று கூறுபவர்கள், வெற்றி பெறக் கூடாது என்று நினைப்பது, இயல்பு தானே.

பகுத்தறிவு சித்தாந்தங்களை விட்டு விட்டு, தி.மு.க.,வினர், வேல் பிடிக்கத் துவங்க வேண்டியதாகி விட்டதே?'வீரவேல், வெற்றிவேல்' என்பது, போர் முழக்கம். தனிப்பட்ட ஒரு சாரார் வேலுக்கு சொந்தம் கொண்டாட முடியாது. இத்தனை நாள் சூலத்தையும், வில்லையும் துாக்கி சென்றவர்கள், தமிழகம் வந்ததும் வேலை துாக்கி இருக்கிறார்கள்; இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை.

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அராஜகம் தலைவிரித்தாடும்; நில அபகரிப்புகள் அதிகமாகும்' என, முதல்வர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டுகிறாரே?யார் அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்; துாத்துக்குடியில் அமைதியாக போராடிய, 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது; ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டது, அ.தி.மு.க., ஆட்சியில் தான்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு பின்னால் இருக்கும் குற்றவாளிகள், அ.தி.மு.க.,வினர். போராடும் விவசாயிகள் அடித்து நொறுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர். அரசு கட்டவிழ்த்து விடும் வன்முறைகள் இவை. தொடர்ந்து வன்முறையை துாண்டி விடுபவர்கள், இவர்கள் தான். முதல்வர் இ.பி.எஸ்., இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, குற்றம் சொல்லட்டும்.

வழக்குப் போட்டு தொந்தரவு கொடுத்ததாலேயே, மன அழுத்தத்தில் ஜெயலலிதா இறந்து விட்டார். அதனால், அவர் இறப்புக்கு, தி.மு.க., தான் காரணம் என, ஓ.பி.எஸ்., பிரசாரம் செய்கிறாரே?ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்குப் போட்டது, பா.ஜ.,வை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, கர்நாடக முதல்வரை வலியுறுத்தியது, பா.ம.க.,ஜெ.,க்கு எதிராக வழக்கு போட்டவர்களை கூட்டணியில் வைத்துக் கொண்டு, அவருக்குத் துரோகம் செய்பவர்கள் இவர்கள். ஜெ.,வுக்கு எதிரான வழக்குகளை, தி.மு.க., எப்போதும் சட்ட ரீதியாக மட்டுமே அணுகியது.

தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடித்த காங்கிரசை, மேலிடத்தில் பேசி வழிக்கு கொண்டு வந்ததே, நீங்கள் தான் என, சொல்கின்றனரே?தொகுதி பங்கீட்டில் முரண்பாடுகள், எதிர் கருத்துக்கள் வருவது இயல்பான ஒன்று. அதை பேசி சரி செய்யத் தான் வேண்டும். நான் என்று இல்லை; எல்லாரும் சேர்ந்து தான், காங்கிரசுடனான தொகுதி பங்கீடு குறித்து பேசி முடித்தோம்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சசிகலா அறிவித்துள்ளாரே?அவர், ஜெ.,வுடன் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். நேரடி அரசியலில், அவர் ஈடுபட்டதாக, எனக்கு தெரியவில்லை. ஓய்வு, அவரது தனிப்பட்ட முடிவு. அதைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

மாநில அரசு முடிவெடுத்து, 'நீட்' தேர்வை ரத்து செய்யவே முடியாது என, தெரிந்தும், தி.மு.க., அதில் வலுக்கட்டாயமாக இருப்பது ஏன்?மாநில அரசு முயற்சி செய்து, நீட் தேர்வை நிறுத்தவே முடியாது என்று, நீங்கள் சொல்வதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை. 2006ம் ஆண்டில் கருணாநிதி, தொழிற்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வை, சட்டமியற்றி ரத்து செய்தது போல, இப்போது ஏன் செய்ய முடியாது; எந்த மாநிலமும் இதுவரை, நீட் தேர்விற்கு எதிராக சட்டம் இயற்றவில்லை. அவ்வாறு சட்டம் கொண்டு வந்தால், அதை நிறைவேற்ற முடியாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி, ஏதும் தகவல் இதுவரை இல்லை. நாங்கள் ஏன் அதை செயல்படுத்த முயற்சிக்கக் கூடாது?

தி.மு.க., கூட்டணிக்கு, லோக்சபா தேர்தலில் கிடைத்த வெற்றி, சட்டசபை தேர்தலில் இருக்காது என, கருத்துக் கணிப்புகள் சொல்கிறதே?'புதிய தலைமுறை' கருத்து கணிப்பில், தி.மு.க., கூட்டணி, 151 முதல், 158 இடங்களில் வெற்றி பெறும் என்றும்; 'டைம்ஸ் நவ்- சி ஓட்டர்' கருத்துக் கணிப்பில், 177 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரான, எந்த கருத்து கணிப்பையும், நான் பார்க்கவில்லை. நிச்சயமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, மிகப்பெரிய வெற்றி பெறும்.

ஒரே தொகுதியில், ஒரே வேட்பாளர், எட்டு முறை தேர்தலில் போட்டியிட, தி.மு.க.,வில் மட்டும் தான் வாய்ப்பளிக்கப்படும் என, கிண்டலாக பேசுகின்றனரே?எட்டு தேர்தல்களில், வெற்றி பெற்றவருக்கு வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு; மக்கள் அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். மக்கள் கருத்தை, ஏன் ஒரு கட்சி எதிர்க்க வேண்டும்; ஆதரவு இருப்பதால் தானே, எட்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.

வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சிக்கு வருவதாக கொள்வோம். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' வாயிலாக பெறப்பட்ட, 17 லட்சம் மனுக்கள் மீதும், 100 நாட்களில் தீர்வு கண்டுவிட முடியுமா?ஸ்டாலின், '100 நாட்களில், நான் தீர்வு காண்கிறேன்' என்று, சொல்லி இருக்கிறார். அதற்காக, தனித்துறை உருவாக்கப்படும். 'பிரச்னைகளுக்குத் தீர்வு காண, நான் பொறுப்பு; நானே பொறுப்பு' என, ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அவர் நிச்சயம் செய்து தருவார்.

தேர்தல் களத்தில் கொரோனா அச்சமின்றி, மக்கள் அதிக அளவில் கூடுகின்றனரே?தேர்தல் பிரசாரத்தின் போது மட்டுமல்ல, மற்ற நேரங்களிலும், மக்கள் முக கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இலவச வாஷிங் மெஷின் அறிவிப்பு, அ.தி.மு.க.,வை காப்பாற்றுமா?மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் எப்படி இருசக்கர வாகனம் தருவதாகச் சொல்லி, தரவில்லையோ; எப்படி மொபைல் போன் தருவதாகச் சொல்லி, தரவில்லையோ; எப்படி, 'செட்டாப் பாக்ஸ்' தருவதாகச் சொல்லி தரவில்லையோ; அதுபோல இதையும் தர மாட்டார்கள் என்று, மக்களுக்குத் தெரியும். இதையெல்லாம் நம்பி ஏமாற, அவர்கள் தயாராக இல்லை.இவ்வாறு கனிமொழி பேட்டி அளித்தார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)