ஒரு சீட்டுக்கு போட்டி: அ.தி.மு.க., கூட்டணி இழுபறி பின்னணி
அடுத்த ஆண்டு அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டையும், கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் கேட்பதால், அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களில், ஆறு பேரின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜூலை 24ல் நிறைவடைகிறது. அப்பதவிகளுக்கு ஜூலையில் தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில், ஒருவர் வெற்றி பெற குறைந்தது, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. தற்போது சட்டசபையில் அ.தி.மு.க.,வுக்கு 66 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரை தவிர்த்தால், 62 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர்.
எனவே, அ.தி.மு.க.,வால் தனித்து ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை மட்டுமே பெற முடியும். விளவங்கோடு, திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்நடந்து, அதில் வெற்றி பெற்றால், பா.ம.க.,எம்.எல்.ஏ.,க்களை சேர்த்தால், இரண்டு ராஜ்யசபாஎம்.பி.,க்கள் பெற வாய்ப்புள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், ஒரு எம்.பி., சீட் மட்டுமே உறுதி என்ற நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் சேர பேச்சு நடத்தும் பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும், தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளன. கிடைக்கும் ஒரு எம்.பி., வாய்ப்பையும் விட்டுத்தர அ.தி.மு.க., விரும்பவில்லை. இதனால், கூட்டணி பேச்சில் இழுபறி நீடிக்கிறது.
இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறுகையில், 'இரண்டு ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைப்பதே எங்களுக்கு சிரமம் என்ற நிலையில், பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ராஜ்யசபா சீட்டை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்.
'எனவே, ராஜ்யசபா சீட் ஒதுக்குவது சிரமம் என்பதை, இரு கட்சிகளிடமும் தெளிவாகக் கூறியுள்ளோம். விரைவில் அவர்கள் எங்கள் கட்சி தரப்பின் நியாயத்தை ஏற்று, தொகுதிப் பங்கீட்டை முடிப்பர் என்றே எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
வாசகர் கருத்து