உச்ச நீதிமன்றம் கெடு: தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்ட எஸ்.பி.ஐ.,
தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றத்துக்கு பாரத் ஸ்டேட் வங்கி அனுப்பி வைத்துள்ளது. 'வரும் 15ம் தேதிக்குள் இணையத்தில் இந்த விவரங்கள் பதிவேற்றப்படலாம்' என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பத்திரம் என்ற நடைமுறை, சட்டவிரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்யுமாறு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், '2019 முதல் தேர்தல் பத்திரங்களை வழங்கியது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ., வங்கி சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மார்ச் 6ம் தேதி வரையில் எஸ்.பி.ஐ., வங்கிக்கு கால அவகாசம் வழங்கியது.
ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, 'எஸ்.பி.ஐ., வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரி ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம், நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
எஸ்.பி.ஐ., தரப்பிலோ, 'தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தரவிறக்கம் செய்து அவற்றை வகைப்படுத்தி தருவது சிக்கலான விஷயமாக இருப்பதால் முழு விவரங்களை வெளியிடும் வகையில் ஜூன் 30ம் தேதி வரையில் அவகாசம் வேண்டும்' எனக் கோரியது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, எஸ்.பி.ஐ., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, 'எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளில் இருந்து தகவல்களை திரட்டி சரிபார்க்க அதிக நேரம் தேவைப்படும். வெவ்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டும். தகவல்களை சரிபார்க்காமல் கொடுக்க வேண்டும் என்றால் மூன்று வாரத்தில் எஸ்.பி.ஐ., வங்கியால் திரட்ட முடியும்' என்றார்.
'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் தங்களிடம் இல்லை' என எஸ்.பி.ஐ., தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், 'நீதிமன்றம் கேட்கும்போது அதனை வங்கி வெளியிட்டுத்தான் ஆக வேண்டும்' என்றனர்.
முடிவில், 'ஜூன் 30 வரையில் அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ., வங்கியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மார்ச் 12 வணிக நேரத்தின் இறுதிக்குள் விவரங்களை வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் 15ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றத்துக்கு எஸ்.பி.ஐ வங்கி அனுப்பி வைத்துள்ளது. வரும் 15ம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவையும் எஸ்.பி.ஐ அமல்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ., அனுப்பியதாகவும் அதனை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து