யார் இந்த நயாப் சைனி : ஹரியானா முதல்வராக தேர்வான பின்னணி
ஹரியானா முதல்வர் மனோகர் லார் கட்டாரின் ராஜினாமாவை தொடர்ந்து, புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவில் பா.ஜ.,-ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலில் ஜனநாயக் ஜனதா கட்சிக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே கூட்டணி பேச்சு நடந்தது. இந்த பேச்சில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தனது முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துவிட்டார்.
அவருடன், துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா உள்பட மொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
ஹரியானாவில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கு 46 எம்.எல்.ஏ.,க்களின் ஆதவு தேவை. கடந்த தேர்தலில் பா.ஜ., 40 இடங்களில் வென்றது. ஜே.ஜே.பி,. கட்சியின் 10 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 7 சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சியமைத்தது.
கடந்த லோக்சபா தேர்தலில் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜே.ஜே.பி.,யின் கூட்டணியின் முறிவால் சுயேச்சைகள் ஆதரவுடன் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது.
முன்னதாக, புதிய சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நடந்தது. இதில், புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஹரியானா மாநில பா.ஜ., தலைவராகவும் எம்.பி.,யாகவும் இருக்கிறார். வரும் லோக்சபா தேர்தலில் மனோகர் லால் கட்டார், பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
யார் இந்த நயாப் சைனி?
பா.ஜ.,வில் 2010ம் ஆண்டு நயாப் சிங் சைனி இணைந்தார். 2010 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின், 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். கடந்த ஆண்டு பா.ஜ., மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சைனி, தற்போது ஹரியானாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து