'சிட்டிங்' தொகுதியை இழந்த சி.பி.எம்., : கோவையில் களமிறங்கும் தி.மு.க.,
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடக் கூடிய தொகுதிகள் முடிவாகியுள்ளன. கோவை தொகுதி கிடைக்காததால், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., ஆகிய கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான, தொகுதி ஒப்பந்தம் கையொப்பம் ஆனாலும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
இது குறித்து, தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பு குழுவினருடன் இரு கம்யூ., கட்சிகளின் பிரதிநிதிகளும் பேச்சு நடத்தி வந்தனர். இதில், இ.கம்யூ., கட்சிக்கு மீண்டும் திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு திண்டுக்கல்லும் மதுரையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மா.கம்யூ.., கட்சியின் சிட்டிங் தொகுதியான கோயம்புத்தூர் தொகுதி மீண்டும் ஒதுக்கப்படவில்லை. இதனால், அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து மா.கம்யூ., கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அவரது செயல்பாடுகளில் சுணக்கம் இருந்ததாக கூறப்பட்டது. அவர், ஏற்கெனவே இருமுறை எம்.பி.,யாக இருந்துவிட்டதால், இந்தமுறை மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் பத்மநாபன் களமிறக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், கோவை தொகுதியை மீண்டும் மா.கம்யூ.,க்கு தி.மு.க., ஒதுக்கவில்லை.
இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், " 2021 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். அவர், இங்கு இருந்த வரையில் கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. அவர் சிறையில் உள்ள நிலையில், தி.மு.க., சற்று பலவீனமாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனை சரிசெய்து கொங்கு மண்டலத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க, கோவை தொகுதியில் தி.மு.க., களமிறங்கும் முடிவில் உள்ளது" என்கின்றனர்.
வாசகர் கருத்து