திண்டுக்கல் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுகிறார் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாண்டி. மனு தாக்கல் முடியும் வரை சும்மா இருந்த தோழர்கள், தற்போது செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கோவில்களுக்கு படையெடுக்கின்றனர். கொள்கையை கடாசி விட்டு, 'ஓட்டு' வரம் வேண்டி, வரதராஜ பெருமாள் கோவில் வாசலில் நின்றபடி பக்தர்களிடம் ஓட்டு சேகரிக்கின்றனர் செங்கொடி தோழர்கள்.கோவிலுக்கு வந்தவர்களோ, தேர்தல் வந்தா தான், நாங்க உங்களுக்கு தேவையோ என்று, அவர்களை பார்த்து கேட்டபடியும், சிரித்தபடியும் கடந்து செல்கின்றனர். சிலர் பிரசாதம் தந்து விட்டு செல்கின்றனர். 'பிரசாதம் சக்சஸ்; பிரசாரம் அவுட்!' என, மெசேஜ் போட்டிருந்தார் ஒரு தோழர்.
அழைப்பு விடுத்தும் அசையாத மணி
ராமநாதபுரம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மணிகண்டன், தனக்கு வாய்ப்பு அளிக்காததால், தொகுதி பக்கமே தலை காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார். மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, அங்கிருந்த அவரது தந்தையான மாவட்ட அவைத்தலைவர் முருகேசனிடம் ஆதரவு கேட்டார். இதனால், பா.ஜ., வேட்பாளர் குப்புராமுக்கு ஆதரவாக, மணிகண்டன் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அவர் வரவில்லையாம். 'கேட்டவருக்கு எல்லாம், 'சீட்' கொடுத்தால், ஒரு தொகுதியில் எத்தனை பேர் தான் போட்டியிடுவது' என, பாட்டு பாடுகின்றனராம், ர.ர.,க்கள்.
வாசகர் கருத்து