லோக்சபா தேர்தல்: பா.ஜ.,விடம் பன்னீர்செல்வம் சொன்னது என்ன?
பா.ஜ., நிர்வாகிகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, "லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம். ஆனால், தனி சின்னத்தில் தான் போட்டி" என, ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக, தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ம.க, தே.மு.திக., ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தே.மு.தி.க., தரப்பில் ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதால், அ.தி.மு.க., உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
மறுபுறம், பா.ஜ.,வுடனும் தே.மு.தி.க., தரப்பில் பேசி வருவதாக கூறப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ., கூட்டணிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தாலும், பிரதமர் மோடியின் தமிழகம் வருகையில் அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
இதனால், 'பா.ஜ., கூட்டணிக்குள் ஓ.பி.எஸ்., வருவாரா?' என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், இணை அமைச்சர் எல்.முருகன், தமிகுழ பா.ஜ தலைவர் அண்ணாமலை ஆகியோரை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'பா.ஜ., கூட்டணிக்கு எங்களுடைய ஆதரவை தருகிறோம். தாமரை சன்னத்தில் போட்டியிட விரும்பவில்லை. அ.தி.மு.க.,வை மீட்டெடுப்பது தான் எங்களின் முக்கியமான பணியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், தாமரை சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் எங்கள் கோரிக்கை நீர்த்துப் போகவே வாய்ப்பு அதிகம். எனவே, எங்கள் அணிக்கு எந்த சின்னம் ஒதுக்கப்பட்டாலும் அதில் போட்டியிடுவோம்" எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னீர்செல்வம் உடனான சந்திப்புக்குப் பிறகு பா.ம.க., தலைவர் அன்புமணியிடமும் பா.ஜ., நிர்வாகிகள் பேசியுள்ளனர். அடுத்து, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனையும் பா.ஜ., நிர்வாகிகள் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து