தேர்தல் பணியில் 'அடுத்த வாரிசு' :மகளை களமிறக்குகிறாரா ஐ.பெரியசாமி ?
லோக்சபா தேர்தல் பணியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா களமிறங்க ஆயத்தமாகி வருகிறார்.
அமைச்சரின் மூத்த மகன் செந்தில்குமார், சில ஆண்டுகளுக்கு முன் கட்சி பணியில் மாவட்ட இளைஞரணி மூலம் ஐக்கியமானார். பின், சட்டசபை தேர்தலில் பழனி எம்.எல்.ஏ.,வாக உருவெடுத்தார். இவரை அமைச்சராக்குவதற்காக இவரது மனைவி மெர்சி, அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து பல பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டதாக கட்சியினரே புலம்பினர்.
பெரியசாமியின் மகள் இந்திரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, குடும்பத்தில் கடும் பூசல் நிலவி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மெர்சியின் வலைதளப் பதிவுகளிலும் வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, போட்டுக் கொடுக்கும் வாசகங்கள் அவ்வப்போது மறைமுகமாக வெளிப்பட்டன.
இதற்கிடையில், கடந்த சட்டசபை தேர்தலில் தந்தை பெரியசாமிக்கு ஆதரவாக, சில இடங்களில் மட்டும் கட்சி நிர்வாகிகளை இந்திரா சந்தித்து ஆதரவு திரட்டினார். அடுத்தடுத்து கட்சியினர், கல்வி நிறுவன விழாக்களில் தலை காட்டி வந்தார்.
சில நாட்களாக அமைச்சர் பங்கேற்கும் விழாக்களில், மகள் இந்திரா படத்துடன் வரவேற்பு பேனர் இடம் பெறுவது அதிகரித்து வருகிறது. 'லோக்சபா தேர்தலில் கட்சிப் பணியும், சட்டசபை தேர்தலில் களப் பணியும் இவர் காண உள்ளார்' என, கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
தி.மு.க., என்றாலே குடும்பக் கட்சி என்று ஊடகங்கள் கூறி வருகிற நேரத்தில், அதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஐ.பெரியசாமியின் குடும்பப்பூசல் அம்பலமாகி வருகிறது என்கின்றனர் கட்சியினர்.
வாசகர் கருத்து