Advertisement

'370' ரத்துக்கு பின் முதல் தேர்தல் உற்சாகத்தில் பா.ஜ.,; உறக்கத்தில் காங்.,

சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், வரும் லோக்சபா தேர்தல் அங்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370, கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த உடன், இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டதும், ஜம்மு - காஷ்மீர் அரசியல்வாதிகள் ஆடித்தான் போயினர்.

அந்த பகுதி முழுதும் மிகப் பெரிய அதிர்வலைகளை இது ஏற்படுத்தியது. அப்பிராந்தியத்தின் அரசியல் செயல்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. ஆண்டாண்டு காலமாக அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த பயங்கரவாத குழுக்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

தங்களுக்கென தனி சட்ட திட்டங்களுடன், சுயாட்சி முறையில் இயங்கி வந்த ஜம்மு - காஷ்மீர், தேசிய நீரோட்டத்தில் இணைந்தது.

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் நடக்கும் முதல் லோக்சபா தேர்தல் என்பதால், அதையே தங்கள் மிகப் பெரிய சாதனையாக முன்னிறுத்த பா.ஜ., முடிவு செய்துள்ளது. அந்த முடிவால்தான் ஜம்மு - காஷ்மீரில் ஒற்றுமையும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளதாக கூறி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

இதை முன்னிலைப்படுத்துவதால் முஸ்லிம்கள் பெரும்பான்மை வகிக்கும் ஜம்மு - காஷ்மீரில் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என பா.ஜ., நம்புகிறது.

பிரதமர் மோடியின் சமீபத்திய காஷ்மீர் பயணத்தின் போதும் கூட, இதே கருத்தை அவர் தன் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.

முக்கிய எதிர்க்கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி, காங்., தலைமையிலான இண்டியா கூட்டணியில் தஞ்சம் அடைய உள்ளன. பா.ஜ.,வை எதிர்க்க இதை விட்டால் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு முன், இந்த இரு கட்சிகளும் இங்கு செய்து வந்த அரசியல் இப்போது செல்லுபடியாகவில்லை. எனவே, முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் என்ன சொல்லப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அமைதி, வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் நில உரிமைகள், கலாசார அடையாளம், சிறப்பு அந்தஸ்தை திருப்பி அளிப்பது ஆகிய இருமுனை கருத்து நிலைப்பாடுகளுக்கு மத்தியில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் நிற்கின்றனர். அவர்களின் எண்ண ஓட்டம், தேர்தலில் எதிரொலிக்கும்.

ஜம்மு - காஷ்மீர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்