ஒரே ஒரு சீட்... அதுவும் ராஜ்யசபா: தி.மு.க., முடிவை கமல் ஏற்றது ஏன்?
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை, தி.மு.க., ஒதுக்கியுள்ளது. 'தேர்தலில் ம.நீ.ம., போட்டியிடவில்லை' எனவும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் வேலையில், முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அக்கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக், கொ.ம.தே.க., இ.கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., வி.சி, ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கான சீட்டுகளை தி.மு.க., ஒதுக்கிவிட்டது.
'மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை தொகுதி ஒதுக்கப்படலாம். அங்கு சிட்டிங் எம்.பி., தொகுதியை கைவசம் வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு வடசென்னை தொகுதி ஒதுக்கப்படலாம்' என பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். முடிவில், தி.மு.க., கூட்டணியில் ம.நீ.ம.,வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், "தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. இந்தக் கூட்டணிக்கு எங்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும்" என்றார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பிரசார பணிகளில் மட்டும் ம.நீ.ம., ஈடுபடப் போவதாகவும் 2025ம் ஆண்டு காலியாக உள்ள ராஜ்யசபா இடத்தை ம.நீ.ம.,வுக்கு தி.மு.க., ஒதுக்கியுள்ளதாகவும் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ம.நீ.ம., வட்டாரங்கள் கூறியதாவது:
தொடக்கத்தில் இருந்தே கூட்டணியில் இடங்களை ஒதுக்குவதில் உள்ள சிரமங்களை தி.மு.க., தரப்பில் கூறி வந்தனர். 'கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், வி.சி., ஆகிய கட்சிகளுக்கு ஓரிரு சதவீதங்களில் ஓட்டு பலம் இருக்கும்போது, மூன்று சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகளை வைத்துள்ள ம.நீ.ம.,வுக்கு குறைந்தது 2 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் ஒதுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தோம்.
தி.மு.க.,வோ, 'கடந்த தேர்தலை விடவும் குறைவான எண்ணிக்கையில் தான் தி.மு.க., போட்டியிடுகிறது. கோவை தொகுதியை ம.நீ.ம.,வுக்கு ஒதுக்குகிறோம். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட்டபோது, கடும் சிரமத்துக்கு இடையில் தான் வெற்றி பெற்றார். அப்படியொரு சூழல் இந்த முறை வந்துவிட கூடாது' என தெரிவித்தது.
ம.நீ.ம., தரப்பிலோ, ' தனி சின்னத்தில் போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறோம்' எனக் கூற, 'அப்படியானால் ராஜ்யசபா சீட்டை தருகிறோம். கமல் பிரசாரம் செய்தால் கூட்டணிக்கு வலு சேர்க்கும். சட்டசபை தேர்தல் வரும்போது அதிக எண்ணிக்கைகளை ஒதுக்குவோம்' என தி.மு.க., தெரிவித்தது.
இதில், ம.நீ.ம., நிர்வாகிகளுக்கு முழு உடன்பாடு இல்லை என்றாலும் இண்டியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, ராஜ்யசபா சீட்டை மட்டும் பெற்றுக் கொண்டோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து